கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தேனியில் இன்று முதல் வரும் 26-ம் தேதி வரை அனைத்து கடைகளையும் அடைக்க வியாபாரிகள் சங்கம் முடிவெடுத்துள்ளது.
முன்னதாக, நேற்று தேனியில் மாவட்ட வியாபாரிகள் சங்கம் சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு செயலாளர் கேஎஸ்கே.நடேசன் தலைமை வகித்தார்.
இதில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் இவற்றை கட்டுப்படுத்த இன்று முதல் (செவ்வாய்க் கிழமை) வரும் 26-ம் தேதி வரை அனைத்து கடைகளையும் அடைப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.
பலசரக்கு, அரிசிஆலை, உணவுப்பொருள், பருப்பு, ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதன்படி, பால் மற்றும் மருந்துக் கடைகளை மட்டுமே திறந்துவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தினமும் 100 பேருக்கு மேல் தொற்று:
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதுவரை மொத்தம் ஆயிரத்து 863பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 670 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 20 பேர் இறந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 134 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் 3 நர்ஸ், பாளையம் கிளைச் சிறையில் உள்ள கைதி என்று பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர்க்கு தொற்று ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றன.
பொதுமக்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது.