அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்: கோப்புப்படம் 
தமிழகம்

புதுச்சேரியில் புதிதாக 63 பேருக்கு கரோனா தொற்று; பாதிப்பு எண்ணிக்கை 1,500-ஐத் தாண்டியது

அ.முன்னடியான்

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 63 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,500-ஐத் தாண்டியுள்ளது.

புதுச்சேரியில் கரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது. தினமும் சராசரியாக 50 முதல் 80 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று (ஜூலை 14) புதிதாக 63 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,500-ஐக் கடந்துள்ளது. இதுவரை 829 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 18 பேர் இறந்துள்ளனர்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று கூறியதாவது:

"புதுச்சேரியில் 637 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தற்போது 63 பேருக்குத் (9.9 சதவீதம்) தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 39 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், 12 பேர் ஜிப்மரிலும், 2 பேர் காரைக்காலிலும், 10 பேர் ஏனாமிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1,531 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் தற்போது கதிர்காமம் மருத்துவக் கல்லூரியில் 376 பேர், ஜிப்மரில் 116 பேர், கோவிட் கேர் சென்டரில் 112 பேர், காரைக்காலில் 55 பேர், ஏனாமில் 24 பேர், மாஹேவில் ஒருவர் என மொத்தம் 684 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று கதிர்காமம் மருத்துவக் கல்லூரியில் 9 பேர், ஜிப்மரில் 19 பேர், கோவிட் கேர் சென்டரில் 5 பேர், ஏனாமில் 11 பேர் என மொத்தம் 44 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 829 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு 18 ஆக உள்ளது.

இதுவரை 26 ஆயிரத்து 592 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 24 ஆயிரத்து 863 பரிசோதனைகள் 'நெகட்டிவ்' என்று வந்துள்ளது. இன்னும் 134 பரிசோதனைகள் முடிவுக்காகக் காத்திருப்பில் உள்ளன. மேலும், இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியிலிருந்து 100 கரோனா நோயாளிகளை ஜிப்மருக்கு மாற்ற நேற்று (ஜூலை 13) ஒரு கடிதம் அனுப்பியுள்ளேன்.

ஏனாம் அருகில் உள்ள ஆந்திரப் பகுதிகளில் தினமும் 300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதிகளில் காலை 6 மணி முதல் 11 மணி வரை மட்டும் கடைகளைத் திறந்திருக்கின்றனர். ஆனால், புதுச்சேரி மாநிலத்தில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கடைகள் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே, ஏனாம் பிராந்தியத்தில் மட்டும் கடைகள் திறக்கும் நேரத்தைக் குறைக்க முதல்வரிடம் வலியுறுத்த உள்ளேன். அனைத்துத் தொகுதிகளிலும் முதல் சுற்று கரோனா பரிசோதனை முகாம் நடந்து முடிந்தவுடன் 2-வது சுற்று முகாம்களை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 10 நாட்களில் கரோனா பரிசோதனையை 3,000 ஆக உயர்த்தத் தயாராக உள்ளோம். பொதுமக்களின் ஒத்துழைப்பு முழுமையாக தேவைப்படுகிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் கரோனா பாதிப்பு உயர்ந்துகொண்டே செல்கிறது. அதே நிலைதான் புதுச்சேரியிலும் உள்ளது. இதனால் தேவையான மருத்துவ உபகரணங்களை 4 அல்லது 5 நாட்களில் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது".

இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT