ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள ஐந்து நடமாடும் மருத்துவ வாகனங்களை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்றினைத் தடுக்கும் வகையில் அனைத்து மருத்துவப் பரிசோதனை வசதிகளையும் கொண்ட 5 நடமாடும் மருத்துவ வாகனங்கள் தொடக்க விழா மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இன்று (ஜூலை 14) நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் கூறியதாவது:
"ஈரோடு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 50 ஆயிரத்து 464 நபர்களிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனை மேற்கொண்டதில் 389 நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 250 பேர் பெருந்துறை அரசு மருத்துவமனயில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இம்மருத்துவமனையில் மொத்தம் 500 படுக்கைகள் உள்ள நிலையில், தற்போது 300 படுக்கைகள் காலியாக உள்ளன. கூடுதலாக நோயாளிகள் வந்தால், அவர்களுக்குச் சிகிச்சையளித்திட அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன.
ஈரோடு மாநகராட்சியில் இதுவரை 70 பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு, நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட 32 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். தற்போது, மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஐந்து நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் மருத்துவக் குழுவினர் கரோனா பரிசோதனை மேற்கொள்ளவுள்ளனர். மாவட்டம் முழுவதும் 93 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, அங்கு வசிக்கும் 25 ஆயிரத்து 748 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஈரோடு வருபவர்களுக்கு சோதனைச்சாவடிகளிலேயே கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. வெளிமாவட்டங்களிலிருந்து ஈரோட்டுக்குள் வந்து பணிபுரிவதற்கு 800 பேருக்கு நிரந்தர இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றை கடைப்பிடித்து வந்தால், நோய்ப்பரவலைத் தடுத்திட முடியும்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.