பெரியாறு அணையில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையை நிறுத்த, அனைத்து கட்சியினரும் ஒன்றுசேர்ந்து மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
திமுகவின் ‘நமக்கு நாமே’ பிரச்சாரப் பயணத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தேனி மாவட்டத்தில் மு.க. ஸ்டாலின் நேற்று நடை பயணம் மேற்கொண்டார். அப் போது செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
பெரியாறு அணையின் பாது காப்புக்கு 124 போலீஸாரை நியமிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதனைத் தடுக்க தமிழகத்தில் அனைத்து கட்சியி னரும் ஒன்றுசேர்ந்து, மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் களை நியமிக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
அதிகமான எம்.பி.க்களை வைத்துள்ள அதிமுக, மத்திய அரசுக்கு வெறும் கடிதம் எழுதா மல், தொழிற்பாதுகாப்பு படை யைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஆண்டிபட்டியில் ஸ்டாலின் நடைபயணம் மேற்கொண்டபோது பள்ளி மாணவர்களிடம் கல்வி உதவித் தொகை முறையாக கிடைக்கிறதா என்று வினா எழுப் பினார். பின்னர், அருகில் இருந்த கடையில் டீ குடித்தார்.
ராயப்பன்பட்டியில் திரண்டி ருந்த பெண்களிடம் சிறிது நேரம் உரையாடினார்.
கே.கே.பட்டி, அணைப்பட்டி யில் திராட்சைத் தொழிலாளர்களி டம் திராட்சை விளைச்சல், நோய் பாதிப்பு குறித்து அவர் கேட்டறிந் தார். பின்னர் மாலையில் போடி பகுதியில் நடைபயணம் சென்ற ஸ்டாலின், இரவில் திண்டுக்கல் மாவட்டத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.
தங்க மோதிரங்கள், வெள்ளி டாலர்கள்…
ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை அருகே மு.க. ஸ்டாலின் நடந்து சென்றபோது, திமுக முக்கிய பிரமுகர் ஒருவர் திடீரென தங்க மோதிரங்கள், வெள்ளி டாலர்களை அள்ளி வீசினார். இதை சற்றும் எதிர்பாராத மக்கள் முண்டியடித்து கீழே கிடந்த மோதிரம், டாலர்களை சேகரித்தனர். கட்சியின் சின்னம் பொறித்த மோதிரம் ஒவ்வொன்றும் தலா ஒரு கிராம் எடை இருந்தது. வெள்ளி டாலர் 12 கிராம் எடை வரை இருந்தது.