தமிழகம்

மத நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் செயல்படும் யூடியூப் சேனலை தடை செய்ய வேண்டும்: காவல் ஆணையரிடம் பாஜக சார்பில் புகார்; 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

செய்திப்பிரிவு

மத நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் செயல்படும் யூடியூப் சேனலை தடை செய்ய வலியுறுத்தி பாஜக சார்பில் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.

பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவராக இருப்பவர் ஆர்.சி.பால் கனகராஜ், இவர் சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வாலிடம் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

யூ டியூப் சேனல் ஒன்றில் இந்து கடவுள் முருகப் பெருமானையும், கந்த சஷ்டி கவசத்தையும் ஆபாசமாக பேசி, புராணகதைகளை ஆபாச வார்த்தைகளால் சித்தரித்து வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் இந்துக்கள், இந்து கடவுள்களின் புனிதத்தை கெடுக்கும் பொருட்டு பாலியல் விளக்கத்தையும் அளித்துள்ளனர். இது மதத்தின் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் உள்ளது. மேலும் இந்துக்கள், அதன் மதத்தையும் மத நம்பிக்கைகளையும் அவமதிக்கும் வகையில் உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட யூ டியூப் சேனலுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை தொடங்க வேண்டும். மேலும், சேனல், அதன் பேச்சாளர் உள்ளிட்டோர் மீது இந்திய தண்டனைச் சட்டவிதிகள்படி நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட யூ டியூப் சேனலைத் தடை செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீஸாருக்கு காவல் ஆணையர் உத்தரவிட்டார். இதையடுத்து கூடுதல் காவல் ஆணையர் தேன்மொழி நேரடிமேற்பார்வையில் துணை ஆணையர் நாகஜோதி தலைமையிலான போலீஸார் விசாரித்தனர். சாதி, மதம், இனம், மொழி, சம்பந்தமாக விரோத உணர்வை தூண்டுதல் உட்பட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

SCROLL FOR NEXT