இரும்புத் தாது ஏற்றுமதிக்கு தடைவிதிக்கப்பட்டதன் எதிரொலியாக, எண்ணூர் காமராஜர் துறை முகத்தில் உள்ள இரும்புத் தாது ஏற்றுமதி முனையம் ரூ.580 கோடி செலவில் நிலக்கரியை கையாளுவதற்கான முனையமாக மாற்றப்பட உள்ளது.
சென்னையை அடுத்த எண்ணூர் காமராஜர் துறைமுகம், 2001-ம் ஆண்டு சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,056 கோடி செலவில் தொடங்கப்பட்டது. மேலும், 2004-ம் ஆண்டில் ரூ.1,400 கோடி முதலீட்டில் பொது மற்றும் தனியார் கூட்டமைப்புடன் 3 முனையங்கள் ஏற்படுத்தப்பட்டன. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தொடங்கப்பட்ட 12-வது துறை முகமான இதில் கப்பல் நிறுத்தும் முனையங்கள் 6 உள்ளன. இவற் றில் 5 முனையங்கள் மட்டும் தற் போது செயல்பாட்டில் உள்ளன.
இதில் ஒரு முனையம் இரும்புத் தாது ஏற்றுமதிக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. இரும்புத்தாது ஏற்றுமதிக்கு அரசு தடை விதித்ததையடுத்து, இந்த முனையத்தில் இரும்புத் தாது கையாளும் பணி நின்றுபோனது. இதனால் இந்த முனையம் வேறு எதற்கும் பயன்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், இந்த முனையத்தை நிலக்கரி கையாளுவதற்கான முனையமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து, காமராஜர் துறை முகத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் எம்.ஏ.பாஸ்க ராச்சார் ‘தி இந்து’விடம் கூறிய தாவது:
இரும்புத் தாது ஏற்றுமதிக்கு தடைவிதிக்கப்பட்டதையடுத்து காமராஜர் துறைமுகத்தில் உள்ள இதற்கான முனையத்தால் கடந்த 5 ஆண்டுகளாக எவ்வித பயன்பாடும் இல்லாமல் இருந்தது. எனவே இந்த முனையம் நிலக்கரி கையாளுவதற்கு ஏற்ற வகையில் மாற்றப்பட உள்ளது. இதற்கு துறைமுகத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.580 கோடி செலவில் இப்பணி மேற் கொள்ளப்பட உள்ளது. இதற்காக டெண்டர் விடப்பட்டு விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இதன் மூலம், ஆண்டொன் றுக்கு 12 லட்சம் டன் நிலக்கரி இந்த முனையத்தின் மூலம் கையாளப் படும். மேலும், இந்த முனையத்தின் மூலம் கிடைக்கும் மொத்த வருவாயில் 52 சதவீதம் காமராஜர் துறைமுகத்துக்கு கிடைக்கும். இவ் வாறு பாஸ்கராச்சார் கூறினார்.