தமிழியக்கம் சார்பில் நாவலர் நூற்றாண்டு நிறைவு தொடக்க விழா காணொலி காட்சி மூலம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
விழாவுக்கு தமிழியக்க நிறுவனர் தலைவரும், விஐடி வேந்தருமான கோ.விசுவநாதன் தலைமை தாங்கி பேசும்போது, ‘‘நாவலர் நெடுஞ்செழியனை நடமாடும் பல்கலைக்கழகம் என அண்ணா பெருமையோடு அழைத்தார். எளிமையானவர். மிகச் சிறந்த தமிழறிஞர். நாவலரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகத்தில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றவேண்டும். 2013-ல் மகாராஷ்டிராவிலும், 2017-ல் கர்நாடகாவிலும் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது’’ என்றார்.
விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசும்போது, ‘‘நாராயணசாமி என்ற பெயரைதமிழ்மீது கொண்ட பற்றால் நெடுஞ்செழியன் என சூட்டிக்கொண்டவர் நாவலர். பாவேந்தர் பாடல்களை தமிழகம் முழுவதும்கொண்டு சேர்த்தவர். கொள்கைக்காகவே வாழ்ந்தவர்’’ என்றார்.
விழாவில், நாவலர் பெயரால் தமிழக அரசு சார்பில் விருது வழங்க வேண்டும். மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றேவண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில் தமிழியக்க மாநிலச் செயலாளர் மு.சுகுமார், பொதுச்செயலர் அப்துல்காதர், பொருளாளர் புலவர் வே.பதுமனார், இரா.தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்,