தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கி உள்ள நிலையில் சென்னை மக்களின் முக்கிய நீர் ஆதாரமான புழல் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து கடல்போல் காட்சி அளிக்கிறது. படம்: பு.க.பிரவீன். 
தமிழகம்

சென்னைக்கு இந்த ஆண்டு தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் வழங்க முடியும்: குடிநீர் வாரிய அதிகாரி திட்டவட்டம்

செய்திப்பிரிவு

சென்னைக்கு இந்த ஆண்டு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்க முடியும் என்று சென்னைக் குடிநீர் வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,257 மில்லியன் கனஅடி. இவற்றில் நேற்றைய நிலவரப்படி 4,896 மில்லியன் கனஅடி நீர்இருப்பு இருந்தது.

கடந்த ஆண்டு இதேநாளில்16 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே இருப்பு இருந்தது. தற்போது மேற்கண்ட ஏரிகளில் போதுமான அளவு நீர் உள்ளதால், குடிநீர் விநியோகத்தில் எந்த தடையும் இல்லைஎன்று சென்னைக் குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

சென்னையில் தற்போது 700 மில்லியன் லிட்டர் (70 கோடிலிட்டர்) குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. தற்போது கடல்நீரைக்குடிநீராக்கும் 2 நிலையங்களில் இருந்து சராசரியாக 180மில்லியன் லிட்டரும், வீராணம் ஏரியில் இருந்து 180 மில்லியன் லிட்டரும், மீதமுள்ள 340 மில்லியன் லிட்டர் குடிநீர் ஏரிகளில்இருந்தும் எடுத்து விநியோகிக்கப்படுகிறது.

இவை தவிர, சென்னைக் குடிநீர் வாரியத்துக்கு சொந்தமான விவசாயக் கிணறுகள், போரூர் ஏரி, கல்குவாரி போன்றவற்றிலும் நீர்இருப்பு உள்ளது. அதனால் இந்த ஆண்டு சென்னையில் தட்டுப்பாடில்லாமல் குடிநீர் விநியோகிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT