கேரளாவில் நடந்த தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை 8 நாள் காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்ஐஏ) அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) தூதரகத்துக்கு தூதரக பார்சல் வழியாக கடந்த 5-ம் தேதி வந்த ரூ.13 கோடி பெறுமானமுள்ள 30 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். என்ஐஏ-வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைய கேரள தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்து வந்த ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், ஷார்ஜாவைச் சேர்ந்த பாசில் ஃபரீத், தூதரக அலுவலக முன்னாள் செய்தித் தொடர்பாளர் சரித் ஆகிய 4 பேர் மீது என்ஐஏ அதிகாரிகள் சிறப்பு நீதிமன்றத்தில் எப்ஐஆர் தாக்கல் செய்தனர்.
இதனிடையே தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ் பெங்களூருவில் சந்தீப் நாயருடன் கைது செய்யப்பட்டார். அவர்களை 14 நீதிமன்ற காவலில் வைக்க கொச்சி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, 'ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரிடம் என்ஐஏ 8 நாள் விசாரணை நடத்தலாம்' என அனுமதி வழங்கினார்.இதையடுத்து அவர்களிடம் விசாரணை தொடங்கவுள்ளது.மேலும் இந்த வழக்கு தொடர்பாக திருவனந்தபுரத்தில் உள்ள யுஏஇ தூதரக முன்னாள் ஊழியர் சுரேஷை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அதேநேரத்தில் ஷார்ஜாவைச் சேர்ந்த பாசில் ஃபரீத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.