சட்டப்பேரவையில் நேற்று இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் பேசியதாவது:
சென்னை தண்டையார்பேட்டை தேவி கருமாரியம்மன், தேனி மாவட்டம் குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் உட்பட தஞ்சை, தருமபுரி, ஈரோடு, புதுக்கோட்டை, கோவை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள 16 கோயில்களில் ரூ.4.05 கோடியில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
தேனி மாவட்டம் ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்க பெருமாள் கோயில் உட்பட 4 கோயில்களில் ரூ.72.30 லட்சத்தில் திருத்தேர் பாதுகாப்பு கொட்டகை மற்றும் புதிய தேர்கள் செய்யும் பணி மேற்கொள்ளப்படும்.
கோயில்களில் பக்தர்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தும் வகையில் மேற்கொள்ளும் தீச்சட்டி எடுத்தல் மற்றும் காவடி எடுத்தலுக்கு பெறப்படும் கட்டணங்கள் ரத்து செய்யப்படும். சைவ, வைணவ கோயில்களில் வேத ஆகம பாடசாலைகள் தொடங்கப்படும். இவற்றில் சேரும் மாணவர்களுக்கு உணவு, தங்கும் வசதி மற்றும் உதவித் தொகை வழங்கப்படும். 5 கோயில்களில் ரூ.3.10 கோடியில் புதிய திருமண மண்டபங்கள் கட்டப்படும். 9 கோயில் குளங்கள் ரூ.1.32 கோடியில் சீரமைக்கப் படும்.
திருவள்ளூர், மதுரை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 4 கோயில்களில் ரூ.2.28 கோடி மதிப்பில் அன்னதானக் கூடங்கள் கட்டப்படும். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உட்பட 7 கோயில்களில் ரூ.3 கோடியே 66 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் வணிக வளாகம், உணவு விடுதிகள் உள்ளிட்டவை கட்டப்படும்.
பழநி, திருவண்ணாமலை, சமயபுரம், சதுரகிரி, இருக்கன்குடி உட்பட 9 கோயில்களில் ரூ.4 கோடியே 26 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் புதிய கழிவறை, குளியலறைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.