வேலூரில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை மூன்றாயிரத்தைக் கடந்த நிலையில், வரும் நாட்களில் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் வாரத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 50-க்குள் இருந்தது. அதன்பிறகு சென்னையில் இருந்த வந்தவர்கள், வேலூர் நேதாஜி மார்க்கெட் மூலம் பரவிய தொற்றால் கடந்த ஜூன் 26-ம் தேதி ஆயிரத்தையும், ஜூலை 6-ம் தேதி இரண்டாயிரத்தையும், ஜூலை 13-ம் தேதி (இன்று) 3 ஆயிரத்தையும் கடந்துள்ளது. கடந்த ஒரே ஒரு வாரத்தில் மட்டும் ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3000 படுக்கை வசதிகள்
வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு பென்ட்லெண்ட் மருத்துவமனை, சிஎம்சி மருத்துவமனை, ஈ.எஸ்.ஐ மருத்துவமனை, குடியாத்தம் அரசு மருத்துமவனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், வேலூர் தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி, ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உறவினர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க ஏறக்குறைய 3 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அதிகரித்து வரும் தொற்று
வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்றின் வேகம் குறைந்து வரும் நிலையில் மாவட்டத்தின் பிற பகுதிகளான அணைக்கட்டு ஒன்றியம், குடியாத்தம் நகராட்சி மற்றும் அதையொட்டியுள்ள கிராமங்களில் கரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் குடியாத்தம் நகரில் தினந்தோறும் சராசரியாக 50 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
காய்ச்சல் பரிசோதனை
வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் விஐடி பல்கலைக் கழகத்தில் 400 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மருத்துவர் மணிவண்ணன் உள்ளிட்டோர் இன்று (ஜூலை 13-ம் தேதி) ஆய்வு செய்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் உள்ள 44 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 10 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் மற்றும் 4 அரசு மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனைகளை அதிகளவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு காய்ச்சல் உள்ளவர்களைக் கண்டறிந்து வருகிறோம்.
வேலூரில் உள்ள கரோனா வார்டில் 2,734 படுக்கை வசதிகள் உள்ளன. தற்போது, வேலூர் விஐடி பல்கலைக்கழகம், குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் கூடுதல் படுக்கை வசதிகள் அமைக்கப்பட உள்ளன. வேலூர் மாவட்டத்தில் அதிகப் பரிசோதனைகள் செய்வதால் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. ஆனால், மாநில அளவில் இறப்பு விகிதம் மிகக் குறைவாக உள்ளது.
வேலூர் மாநகரில் நோய்ப்பரவல் கட்டுக்குள் உள்ளது. கரோனா தொற்றில் தற்போது குடியாத்தம் நகராட்சி சவாலாக மாறியுள்ளது. அதேபோல் பள்ளிக்கொண்டாவில் உள்ள ஒரு மருந்தகத்திற்கு வந்து சென்றவர்களில் சுமார் 50 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள இரண்டு கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.