திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்து கொள்வதற்காக இன்று (ஜூலை 13) அதிக அளவில் பொதுமக்கள் குவிந்தனர்.
இதனிடையே, கரோனா சோதனை எண்ணிக்கையை இன்னும் சில நாட்களில் 1,500 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவமனை முதல்வர் கே.வனிதா தெரிவித்துள்ளார்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த திருச்சி மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஜூலை 9-ம் தேதி 93 பேருக்கும், ஜூலை 10-ம் தேதி 109 பேருக்கும், ஜூலை 11-ம் தேதி 128 பேருக்கும், ஜூலை 12-ம் தேதி 103 பேருக்கும் கரோனா தொற்று உறுதியானது.
இதன்படி, திருச்சி மாவட்டத்தில் இதுவரை மாநகரப் பகுதியில் 833 பேர் உட்பட மொத்தம் 1,504 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், 926 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுவிட்ட நிலையில், இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 562 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், திருச்சி அரசு மருத்துவமனை காய்ச்சல் பிரிவில் கரோனா பரிசோதனை செய்ய இன்று பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர்.
இது தொடர்பாக அரசு மருத்துவமனை முதல்வர் கே.வனிதாவிடம் கேட்டபோது, ''திருச்சி அரசு மருத்துவமனையில் ஒரு நாளைக்கு 800 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கரோனா பரிசோதனை செய்துகொள்ள வெளிநோயாளிகள் பிரிவுக்கு வழக்கமாகக் காய்ச்சல் நோயாளிகள் 250 பேர் வரை வருவர். முழு ஊரடங்கு காரணமாக ஞாயிற்றுக்கிழமை 150 பேர் மட்டுமே வந்தனர். மேலும், திருச்சியில் உள்ள தனியார் கரோனா பரிசோதனை மையம் மூடப்பட்டுள்ளதால், தற்போது அரசு மருத்துவமனைக்குக் கரோனா பரிசோதனை செய்வதற்கு வருவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
கரோனா பரிசோதனை செய்வதற்கு வரும் அனைவருமே காய்ச்சல் நோயாளிகள் அல்லர். அறிகுறிகள் இல்லாத நிலையிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் வருகின்றனர். இன்னும் சில நாட்களில் திருச்சி அரசு மருத்துவனையில் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனை எண்ணிக்கையை 1,500 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.