புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கரோனா தொற்றால் விற்பனையின்றித் தேங்கியிருந்த ஐஸ்கிரீம்கள் சாலையிலும், குப்பையிலும் இன்று கொட்டி அழிக்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தைச் சேர்ந்தவர் எஸ்.செந்தில். இவர், கடந்த சில ஆண்டுகளாக ஆலங்குடியில் உள்ள தனியார் ஐஸ்கிரீம் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
பின்னர், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனியாகத் தொழில் தொடங்க முடிவு செய்தார். இதற்காக ஐஸ்கிரீம் தயாரிக்கக்கூடிய இயந்திரம், 10-க்கும் மேற்பட்ட ஐஸ்பெட்டிகள், ஐஸ்கிரீம் விற்பனை செய்வதற்கென 5 வாகனங்கள் என சுமார் ரூ.15 லட்சத்தில் கொத்தமங்கலத்தில் நிறுவனத்தைத் தொடங்கினார். அங்கு 25-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்தனர்.
முன்னதாக முதலீட்டில் குறிப்பிட்ட தொகையைக் கடனாகப் பெற்றுள்ளார் செந்தில். நாளொன்றுக்கு சுமார் ரூ.1 லட்சத்துக்கு ஐஸ்கிரீம் விற்பனையாகி உள்ளது. இதற்கிடையில், மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ஐஸ்கிரீம் தொழில் அடியோடு முடங்கியது. மேலும், குளிர்ச்சியான பொருள் என்பதால் இதன் மூலமும் கரோனா தொற்று பரவக்கூடும் என மக்கள் புரிந்துகொண்டதால் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், விற்க முடியாமல் தேங்கி இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான ஐஸ்கிரீம் மற்றும் அதற்கான மூலப்பொருட்கள் இன்று சாலையிலும், குப்பையிலும் கொட்டி அழிக்கப்பட்டன.
மேலும், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள தனக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என அதன் உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து செந்தில் கூறியதாவது:
’’தொழில் தொடங்கிய ஒரு மாதத்திலேயே நிறுவனம் மூடப்பட்டதால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கோடை, கோயில் திருவிழா, மொய் விருந்து விழா போன்ற விழாக்களில் அதிகமான எண்ணிக்கையில் ஐஸ்கிரீம் விற்பனையாகும் எனக் கருதி கடன் வாங்கித் தொழில் தொடங்கினேன். ஆனால், கரோனா பரவலால் இந்த விழாக்கள் தடைப்பட்டன. இதனால், ஒரு மாதத்திலேயே தொழில் முடங்கிவிட்டது.
மின்கட்டணம் செலுத்தவும், வட்டி கட்டவும் தினமும் விவசாயக் கூலி வேலைக்குச் செல்கிறேன். மேலும், மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டியுள்ளது. எனவே, அரசு எனக்கு வட்டியில்லாக் கடன் வழங்கி எனது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்’’.
இவ்வாறு செந்தில் கூறினார்.