தமிழகம்

காற்றின் திசைவேகம் காரணமாக 48 மணி நேரத்துக்கு மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ள நிலையில், காற்றின் திசைவேகம் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:

''தமிழகத்தில் காற்றின் திசைவேகம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், காஞ்சிபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் நகரின் ஒரு சில பகுதிகளில் கூறிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. திருக்கழுக்குன்றம் (காஞ்சிபுரம்) பகுதியில் 8 செ.மீ., கேளம்பாக்கம் (காஞ்சிபுரம்), சென்னை விமான நிலையம் பகுதிகளில் தலா 7 செ.மீ., மகாபலிபுரத்தில் 6 செ.மீ, சோழவரத்தில் (திருவள்ளூர்) 5 செ.மீ., தாம்பரம், நத்தம் (திண்டுக்கல்) செய்யூர் (செங்கல்பட்டு), பூண்டி (திருவள்ளூர்) ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ., பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), தாமரைபாக்கம் (திருவள்ளூர்) பகுதிகளில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

கடலோரக் கர்நாடகப் பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஜூலை 15 மற்றும் ஜூலை 16-ம் தேதிகளில் கர்நாடக, கேரளக் கடலோரப் பகுதிகளில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூலை 13 முதல் ஜூலை 17-ம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்''.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT