எல்லோரும் சட்டப்பேரவை உறுப்பினராகவோ, அமைச்சர்களாகவோ ஆக முடியாது. சிலர்தான் ஆக முடியும். அதனைப் புரிந்து கொண்டு திமுகவுக்காகப் பணியாற்றும் எத்தனையோ பலராமன்கள் இருப்பதால் தான், இத்தனை ஆண்டுகள் திமுக யாராலும் அசைக்க முடியாத கற்கோட்டையாக இருக்கிறது என அஞ்சலிக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசினார்.
இன்று (13-7-2020) காலை திமுக தலைவர் ஸ்டாலின், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில், (மறைந்த) வடசென்னை மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் எல்.பலராமன் உருவப் படத்தைத் திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது எல்.பலராமன் குடும்பத்தினர் உடனிருந்தனர். இக்காணொலிக் காட்சி நிகழ்ச்சியில் ஏராளமான திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின்னர் காணொலி வாயிலாக, ஸ்டாலின் பேசியதாவது:
“வடசென்னை திமுக முன்னாள் செயலாளரும், கட்சியின் தணிக்கைக்குழு உறுப்பினருமான சகோதரர் எல்.பலராமன் நம்மை விட்டுப் பிரிந்ததன் நினைவாக அவரது திருவுருவப் படத்தை இன்றைக்கு நான் திறந்து வைத்திருக்கிறேன்.
கட்சிக்காக உழைத்தவர்களை, கட்சிக்காகப் பாடுபட்டவர்களை எந்தச் சூழ்நிலையிலும் நாம் மறந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், இந்தக் கரோனா காலத்திலும் இதுபோன்ற படத்திறப்பு நிகழ்ச்சிகளை நாம் நடத்தி வருகிறோம்.
இந்த நிகழ்வில், வடசென்னை மாவட்ட முன்னாள் செயலாளரும், கழகத்தின் தணிக்கைக்குழு உறுப்பினருமான எல்.பலராமன், பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியன், சென்னை சட்டக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் அ.ர.சனகன், புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் புதல்வரும் - முதுபெரும் தமிழறிஞருமான ‘கலைமாமணி’ மன்னர் மன்னன், விருத்தாசலம் திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், தீர்மானக்குழுச் செயலாளருமான குழந்தை தமிழரசன், முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், மூத்த வழக்கறிஞருமான வி.டி.கோபாலன், சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு துணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கு.லாரன்ஸ், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட அவைத் தலைவர் ஜி.சுகுமாறன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரங்கல் தீர்மானத்தையும் நிறைவேற்றி உள்ளோம்.
எந்தத் துன்பம் நேர்ந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் கட்சிக்காக உழைத்தவர்கள் அவர்கள். அதனால், அவர்களை இந்த நோய்த்தொற்றுக் காலத்திலும் மறந்துவிடக்கூடாது என்பதன் அடையாளமாகத்தான் இந்த நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறோம்.
சகோதரர் எல்.பலராமனைப் பற்றி இங்கே அனைவரும் எடுத்துச் சொன்னார்கள்.
ஒவ்வொருவருக்கும் கட்சிப் பணியாற்றுவதில் ஒரு பாணி இருக்கும். சிலர் பரபரப்பாகப் பணியாற்றுவார்கள்; சிலர் பதற்றமாகப் பணியாற்றுவார்கள்; சிலர் அமைதியாக வேலை பார்ப்பார்கள்; சிலர் தாங்கள் வேலை பார்க்கிறோம் என்பதே தெரியாதது மாதிரி வேலை பார்ப்பார்கள்.
சகோதரர் எல்.பலராமன் கட்சிப் பணிகள் அனைத்தையும் அமைதியாக, அவர் என்ன மாதிரிப் பணியாற்றுகிறார் என்றே தெரியாத அளவுக்கு அடக்கமாக ஆற்றுவார்; வேலைகள் அனைத்தையும் நடத்தி முடிப்பார். அத்தகைய திறமை சிலருக்கு மட்டும்தான் இருக்கும். அத்தகைய திறமைசாலியாக எல்.பலராமன் இருந்தார்.
இன்றைக்கு சென்னை மாவட்டம் நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளது. முன்பு வடசென்னை, தென்சென்னை என்ற இரண்டு பிரிவுகளாக மட்டுமே இருந்தது. வடசென்னைப் பகுதி என்பது மிகப்பெரியது. அதனை ஒற்றை மனிதராக இருந்து தாங்கியவர் சகோதரர் எல்.பலராமன்.
வடசென்னை என்பது மிக முக்கியமான மாவட்டம். ஏனென்றால் கட்சிக்கான அடித்தளம் போடப்பட்டது வடசென்னையில்தான். ராயபுரம் ராபின்சன் பூங்காவில் கட்சி தொடங்கப்பட்டது. கட்சியின் முதல் தலைமைக் கழகமான ‘அறிவகம்’ அங்குதான் அமைந்தது.
எனவே, வடசென்னையை திமுகவின் கோட்டையாக மாற்றுவது மட்டுமல்ல; அதனைத் தக்கவைத்துக் கொள்வதும் மிக மிக முக்கியமானது. அந்த வகையில் எல்.பலராமன் வடசென்னையை, திமுகவின் கோட்டையாக மாற்றியது மட்டுமல்ல; அதனைத் தக்க வைக்கவும் காரணமாக இருந்தார்.
இன்னொரு முக்கியமான பெருமை, சகோதரர் பலராமனுக்கு உண்டு. தலைவர் கலைஞரையும், பொதுச்செயலாளர் க.அன்பழகனையும் ஒவ்வொரு முறையும் சட்டப்பேரவைக்கு அனுப்பி வைக்க தேர்தல் களத்தில் பணியாற்றியவர் எல்.பலராமன்.
தலைவர் கலைஞருக்கும், அன்பழகனுக்கும் தேர்தல் பணிச்செயலாளரைப் போல் செயல்பட்டவர் பலராமன். அவர்கள் இருவரும் வேறு தொகுதியைத் தேர்வு செய்தால், அங்கு பலராமன் போட்டியிடும் வாய்ப்புக் கூட ஏற்படும். ஆனால் அதனைப் பற்றிக் கவலைப்படாமல் களப்பணியாற்றுவார்.
1989, 1991 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் தலைவர் கலைஞர் துறைமுகம் தேர்தலில் வெற்றி பெறப் பெரிதும் உழைத்தவர் பலராமன். அதிலும் குறிப்பாக 1991 தேர்தல் என்பது, திமுகவுக்கு மிகமிகச் சோதனையான தேர்தல்.
ராஜீவ் காந்தி கொலையைத் தொடர்ந்து ஏற்பட்ட அனுதாபம் ஒருபக்கம் என்றால்; மறுபக்கம் நம் மீதே பழிபோட்டு சதி செய்தார்கள். நம் இயக்கத்தவர் மீது வன்முறைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் தேர்தலில் இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே திமுக வெற்றி பெற்றது. அப்போது தலைவர் கலைஞர் துறைமுகம் தேர்தலில் வெற்றி பெற அஞ்சாமல் பாடுபட்டவர், சகோதரர் பலராமன்.
பலராமன் வட்டச் செயலாளராக இருந்தார். பகுதிச் செயலாளராக வளர்ந்தார். வடசென்னை மாவட்டச் செயலாளராக உயர்ந்தார். ஆனால், வார்டு கவுன்சிலராகவோ, சட்டப்பேரவை உறுப்பினராகவோ ஆகவில்லை. அதைப் பற்றிக் கவலைப்பட்டவரும் அல்ல. திமுக ஆட்சியில் இருந்தால் போதும், நாம் ஆட்சியில் இருப்பது மாதிரிதான் என்று நினைத்துப் பணியாற்றினார்.
கவுன்சிலராக, சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துதான் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. எல்லோரும் சட்டப்பேரவை உறுப்பினராகவோ, அமைச்சர்களாகவோ ஆக முடியாது. சிலர்தான் ஆக முடியும். அதனைப் புரிந்துகொண்டு திமுகவுக்காகப் பணியாற்றும் எத்தனையோ பலராமன்கள் இருப்பதால்தான், இத்தனை ஆண்டுகள் திமுக யாராலும் அசைக்க முடியாத கற்கோட்டையாக இருக்கிறது.
ஒவ்வொரு முறையும் கூட்ட மேடையில், பலராமனைத் தனிப்பட்ட முறையில் தலைவர் கலைஞர் பாராட்டுவார். அவர் பலராமன் அல்ல; ‘பலேராமன்' என்று தலைவர் சொல்வார். இவை வெறும் வார்த்தைகள் அல்ல; ‘கல்வெட்டு' போன்ற வார்த்தைகள் இவை. திமுக நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் பங்கெடுத்துச் சிறை சென்றார்.
திமுக நிர்வாகிகள், தொண்டர்களிடம் அன்பாகப் பழகுவார். அதிகாரத் தோரணை காட்ட மாட்டார். அனைவருக்கும் விருந்துகள் படைப்பார். தனது வீட்டுக்கே அழைத்துச் சென்று உணவு பரிமாறுவார். அத்தகைய தாயன்பு கொண்டவர் பலராமன். என்னைப் பலமுறை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று உணவு பரிமாறி இருக்கிறார்.
பல ஆண்டுகளுக்கு முன்னால் நானும் - அண்ணன் அழகிரியும், தம்பி தமிழரசும் இணைந்து ஏதாவது தொழில் தொடங்கலாம் என்று சிந்தித்தோம். ஆப்செட் அச்சகம் வைக்கத் திட்டமிட்டோம். அதற்காக சிவகாசி சென்று அச்சு இயந்திரம் வாங்கி வந்தோம். அச்சகம் அமைப்பதற்காகக் கட்டிடம் கட்டியபோது அந்தப் பணிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி, உறுதுணையாக இருந்தவர் சகோதரர் பலராமன்.
எங்களுக்கு அப்போது தயாளு அம்மையார் உணவு தயாரித்து எடுத்து வந்தார். அப்போது பலராமனுக்குக் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதனை அறிந்த அம்மா, அவருக்காக தனியாக கஞ்சி காய்ச்சி எடுத்து வந்தார். அருகில் இருந்து சாப்பிட வைத்தார். அப்போது சகோதரர் கண் கலங்கிவிட்டார். “நீயும் என்னோட மகன்தானப்பா” என்று தயாளு அம்மா சொன்னார். அதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
பலராமன் மறைவு என்பது, சொந்த சகோதரன் மறைவைப் போல என்னைப் பாதித்துவிட்டது. மிசாவில் நான் கைது செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஏழுகிணறு பகுதியில் நானும் சகோதரர் சிட்டிபாபுவும் கலந்துகொண்ட கூட்டத்தை ஏற்பாடு செய்ததும் சகோதரர் பலராமன்தான்.
அடுத்த சில நாட்களில் நான் கைது செய்யப்பட்டேன். என் மீது விழுந்த அடியைத் தாங்கி சிட்டிபாபு மரணம் அடைந்தார். இப்படி எத்தனையோ தியாகிகள் வரிசையில் சகோதரர் பலராமனும் சேர்ந்துவிட்டார். 2014-ஆம் ஆண்டு தன்னுடைய, சீனிவாசா இன்ஜினீயரிங் ஒர்க்ஸ் நிறுவனத்தின் 50-வது ஆண்டுவிழாவுக்கு என்னைச் சிறப்பு அழைப்பாளராக அழைத்துச் சென்று பேச வைத்தார் பலராமன்.
அப்போது இந்த வடசென்னையில் கட்சியை எப்படி வளர்த்தார் என்றும், தனது நிறுவனத்தை எப்படி படிப்படியாக வளர்த்தார் என்றும் சொன்னார். அதைக் கேட்கும்போது, மூத்த உறுப்பினர் ஒருவர் இளையவர்களுக்குப் பாடம் நடத்துவது போல இருந்தது. “உங்களது பேச்சைக் கேட்டு நான் உற்சாகம் அடைந்தேன்” என்று அந்த மேடையிலேயே சொன்னேன்.
அத்தகைய உற்சாகத்தை எனது இளமைக் காலம் முதல் வழங்கி வந்த ஒரு சகோதரரை நான் இழந்திருக்கிறேன். அவரைப் போன்ற உற்சாகத்தை வழங்குபவர்களாக, அடக்கமாக, அதே நேரத்தில் தொய்வின்றிப் பணியாற்றுபவர்களாக சென்னை மாவட்டக் திமுகவைச் சேர்ந்த அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று கேட்டு விடை பெறுகிறேன்”.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.