தாழ்ந்த தமிழகத்தை தலை நிமிரச்செய்ய, இழந்த பெருமைகளை மீட்க, காமராஜர் நிகழ்த்திய பொற்கால ஆட்சி முறையை மீண்டும் அமைத்திடும் வகையில் மக்கள் விரோத ஊழல் சக்திகளிடமிருந்து தமிழகத்தை மீட்கும் நாளாக காமராஜர் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
“காமராஜரின் 117-வது பிறந்தநாளான ஜூலை 15 அன்று தமிழகம் மீட்பு நாளாகவும் அதை நிறைவேற்றுகிற வகையில் உறுதிமொழி ஏற்பு நாளாகவும் கடைப்பிடிப்பதென தமிழ்நாடு காங்கிரஸ் முடிவு செய்திருக்கிறது. காமராஜர் தமிழகத்தின் முதல்வராக இருந்த காலத்தில்தான் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டது.
சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக இலவசக் கல்வியும், பகல் உணவும் வழங்கப்பட்டு கல்வியில் புரட்சி நடந்தது. தொழில் வளர்ச்சி, மின்துறையில் சாதனைகள், பாசனத் திட்டங்கள், நிலச் சீர்திருத்தங்கள், பஞ்சாயத்துராஜ் அமைப்புகள், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப் பட்டோருக்கான சமூக நீதி போன்ற சாதனைகள் படைக்கப்பட்டன.
அதனால்தான் அவரது ஆட்சிக்காலத்தை தமிழகத்தின் பொற்காலம் என்று வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்து பாராட்டுகிறார்கள். மூவேந்தர் ஆட்சிக்காலத்தில் நிகழாத அற்புதங்கள் எல்லாம் காமராஜர் ஆட்சியில் நிகழ்ந்ததாக மகுடம் சூட்டிப் போற்றுகிறார்கள். தமது ஆட்சிக்காலத்தில் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களின் மூலம் தமிழகத்திற்கு முதல் முறையாக அடித்தளமிட்டவர் காமராஜர். காமராஜரின் ஆட்சியை இன்றைய ஆட்சியோடு ஒப்பிட்டுப் பார்க்கிறபோது, நெஞ்சு பொறுக்கமுடியாமல் வேதனையில் விம்முகிறது.
அன்று கல்வியில் புரட்சி நடந்தது. இன்று கல்வி விற்கப்பட்டு, வணிகமயமாவதில் புரட்சி நடக்கிறது. அன்று எளிமை, நேர்மை, தூய்மையான, ஊழலற்ற ஆட்சி நடந்தது. ஆனால் இன்று ஆடம்பரம், ஊதாரித்தனம், சுயநலமிக்க, அராஜக, மக்கள் விரோத, ஊழலாட்சி நடக்கிறது. அவரது ஆட்சிக்காலத்தில் தலைநிமிர்ந்து பீடு நடைபோட்ட தமிழகம், இன்று அனைத்துத் துறைகளிலும் தாழ்ந்த தமிழகமாக தலைகுனிந்து நிற்கிறது.
எனவே, தாழ்ந்த தமிழகத்தை தலை நிமிரச்செய்ய, இழந்த பெருமைகளை மீட்க, பெருந்தலைவர் காமராஜர் நிகழ்த்திய பொற்கால ஆட்சி முறையை மீண்டும் அமைத்திடும் வகையில் மக்கள் விரோத ஊழல் சக்திகளிடமிருந்து தமிழகத்தை மீட்டு மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி அமைத்திட காமராஜர் பிறந்த நாளை தமிழகம் மீட்பு நாளாகவும், உறுதிமொழி ஏற்பு நாளாகவும் கொண்டாட முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
அதன்படி, வருகிற ஜூலை 15 அன்று காலை 11 மணிக்கு அனைத்து மாவட்ட, வட்டார, நகர, பேரூர், கிராம காங்கிரஸ் கமிட்டிகள் அவரது படத்தை அலங்கரித்து மலர் தூவி மரியாதை செலுத்த வேண்டும். அதைத் தொடர்ந்து, அவரது படத்திற்கு முன்பு காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் தமிழ்நாடு காங்கிரஸ் அனுப்பியுள்ள உறுதிமொழியை ஏற்றிடும் வகையில் சமூக ஊரடங்கிற்கு கட்டுப்பட்டு சமூக விலகலுடன் நிகழ்ச்சிகளை அமைத்திட வேண்டும்.
மேலும் காமராஜரின் பிறந்த நாளில் ஏழை, எளியவர்களுக்கு, மாணவ, மாணவியர்களுக்கு பயன்படுகிற வகையில் நலத்திட்ட உதவிகள் செய்திட வேண்டும்”.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.