கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் நேற்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், கடைகள் அடைக்கப்பட்டன. வாகனப் போக்குவரத்து இல்லாததால் சாலைகள் வெறிச்சோடின. வீடுகளிலேயே மக்கள் முடங்கினர்.
தமிழகத்தில் சில தளர்வுகள், கட்டுப்பாடுகளுடன் வரும் 31-ம்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மாதத்தின்அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில், ஜூலை 2-வது ஞாயிறான நேற்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்குஅமல்படுத்தப்பட்டது.
சென்னையில் மருந்துக் கடைகள் தவிர்த்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.திருமழிசை காய்கறி சந்தை, மாதவரம் பழச்சந்தை ஆகியவற்றுக்கும் நேற்று விடுமுறை விடப்பட்டது. சென்னையில் போலீஸார் 193 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து, தேவையின்றி வாகனங்களில் செல்வோரை கண்காணித்தனர். விதிகளை மீறிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வாகனப் போக்குவரத்தும் முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருந்ததால், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஒருசில பகுதிகளில் விதிகளைமீறி மறைமுகமாக செயல்பட்ட இறைச்சிக் கடைகளை அந்தந்த உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர். இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர்.