பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்ட அர.அருளரசு தெரிவித்தார்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி) பணியாற்றி வந்த சுஜித்குமார், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த அர.அருளரசு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இன்று (ஜூலை 12) மதியம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அர.அருளரசு, கடந்த 2001-ம் ஆண்டு நேரடி துணைக் காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) காவல் துறை பணியில் சேர்ந்தார். தருமபுரியில் பயிற்சிக்கு பின்னர், ஓசூர், குடியாத்தம், பன்ருட்டி ஆகிய உட்கோட்டங்களில் துணைக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய இவர், 2009-ம் ஆண்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளராக(ஏடிஎஸ்பி) பதவி உயர்வு பெற்று, மாநில உளவுத்துறையில் பணியாற்றி வந்தார்.
பின்னர், 2012-ல் காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி) பதவி உயர்வு பெற்று அதேப் பிரிவில் 2017-ம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார். பின்னர், 2017-ம் ஆண்டு முதல் நடப்பாண்டு ஜூலை 11-ம் தேதி வரை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய அருளரசு தற்போது, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார். 2015-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தரம் உயர்த்தப்பட்ட அருளரசு, 2012-ம் ஆண்டுக்கான சீனியாரிட்டியில் உள்ளார்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு செய்தியாளர்களிடம் கூறும்போது, "சட்டம் ஒழுங்கு சீர் குலையாமல் பாதுகாப்பதும், குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதும், விபத்து சம்பவங்களை தடுப்பதும் காவல்துறையினரின் தலையாயப் பணி. மேற்கண்டவற்றின் மீது உரிய கவனம் செலுத்தி, தொடர்ந்து தடையின்றி மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் தங்களது பிரச்சினைகள் புகார்கள் தொடர்பாக எந்நேரத்திலும் என்னை சந்தித்து புகார் அளிக்கலாம். அதன் மீது உரிய நடவடிக்கை, உடனடியாக மேற்கொள்ளப்படும். மேலும், 94981-22422 என்ற எண்ணில் பொதுமக்கள் என்னை தொடர்பு கொள்ளலாம்" என்றார்.