கரோனா தொற்றுடன் வாழ வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று (ஜூலை 12) கூறும்போது, "கடைகளுக்கு சென்று தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் பொருட்கள் வாங்குவதாலும், திருமண நிகழ்ச்சி மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் அதிக கூட்டத்தை கூட்டி முகக்கவசம் அணியாமல் பங்கேற்பதாலும் கரோனா தொற்று வருகிறது.
கரோனா தொற்று உள்ள நேரத்தில் வீட்டிலேயே திருமணத்தை வைத்துக் கொள்ளுங்கள். கோயிலில் வைக்க வேண்டும் என்றால் மிக குறைந்த அளவில் உறவினர்களை அழைத்து திருமணத்தை நடத்த வேண்டும். அதிகப்படியானோரை அழைத்து திருமணம் செய்வதால் திருமணத்துக்கு வருவோருக்கும் கரோனா தொற்று பரவுகிறது. இதனை தவிர்க்க வேண்டும்.
தற்போது கரோனா தொற்றுடன் வாழ வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது. இதனை பல வல்லுநர்கள் கூறுகின்றனர். இதனை உலக அரங்கில் இப்போது அங்கீகரித்துள்ளனர்.
இதனால் உயிரிழப்பை தவிர்ப்பது மக்கள் கையில்தான் உள்ளது. ஆகவே, கரோனா தொற்றுடன் வாழ வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். இரு தினங்களுக்கு முன்பு சட்டப்பேரவை கூட்ட தொடருக்காக அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டது. அதனை குறுகிய காலத்தில் முடித்துவிட்டோம் என்று ஒருசிலர் விமர்சனம் செய்கின்றனர். புதுச்சேரி அரசிலிருந்து மத்திய அரசிடம் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறுவதற்காக 40 நாட்களுக்கு முன்பு கடிதம் அனுப்பினோம்.
மத்திய அரசிலிருந்து ஒரு கடிதம் அனுப்பி சில விளக்கம் கேட்டார்கள். அந்த விளக்கத்தை கொடுத்திருந்தோம். அதன்பிறகு, மத்திய அரசு ஒப்புதல் கொடுத்ததாக உள்துறை அமைச்சக அதிகாரியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது கூறினார்கள். இதனை கருத்தில் கொண்டு ஆளுநர் உரை, பட்ஜெட் உரையை தயார் செய்வதற்காக அமைச்சரவையை கூட்டினோம்.
ஆனால், கடிதம் வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டதால் நாங்கள் அந்த கூட்டத்தில் வேறு சில முடிவகளை எடுத்துவிட்டு அதனை ஒத்தி வைத்துள்ளோம். இது எங்களின் தவறல்ல. உள்துறை அமைச்சகத்தின் அதிகாரி சொன்னதன் அடிப்படையில், கடிதம் கையில் வராத வரையில் அதற்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்காகத் தான் அமைச்சரவை கூட்டத்தில் வேறு பிரச்சினைகளை பேசி முடிவெடுத்துள்ளோம்.
ஒரு சிலர் சட்டப்பேரவையை பல நாட்கள் நடத்த வேண்டும் என்று கூறுகின்றனர். இது சம்பந்தமாக முடிவெடுப்பது சபாநாயகர் தான். சபாநாயகர் சட்டப்பேரவை அலுவல் குழுவை கூட்டி முடிவு செய்வார். பல மாநிலங்களில் கரோனா தொற்று இருக்கின்ற காரணத்தால் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க முடியாத சூழ்நிலையை கருத்தில் கொண்டு குறுகிய காலத்தில் சட்டப்பேரவையை முடித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் கூட நிலைக்குழு நடத்தப்படவில்லை. நாடாளுமன்றமும் கூட்டப்படவில்லை. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது இருக்கின்ற சூழ்நிலையில் சட்டப்பேரவையை நடத்துவது என்பது அலுவல் குழு செய்யும் முடிவைப் பொருத்துத்தான் இருக்கிறது.
கல்லூரிகளில் இறுதித்தேர்வை நடத்த வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இப்போது பல்கலைக்கழகங்கள் தேர்வை நடத்த வேண்டும் என்று கூறி வருகின்றனர். இந்த சமயத்தில் தேர்வு நடத்துவது என்பது இயலாத காரியம். தனிமனித இடைவெளியை கடைபிடிக்க முடியாது. கரோனா தொற்று எப்படி பரவும் என்று யாராலும் சொல்ல முடியாது. தேர்வு நடத்தும்போது எந்த முறையில் நடத்தப்பட வேண்டும் என்ற விதிமுறைகளும் வகுக்கப்படவில்லை.
இதற்கிடையில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மருத்துவ மேற்படிப்புக்கு தேர்வை அறிவித்துள்ளனர். இது சம்பந்தமாக மாணவர்கள் என்னை சந்தித்து தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மத்திய அரசானது இதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும்.
நகரில் பலருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையிலும், புதுச்சேரியிலும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, அதற்கான சூழ்நிலையை உருவாக்குவது சிரமமான காரியம். இதனை கருத்தில் கொண்டு அவரவர் கடந்தகால பருவதேர்வுகளில் வாங்கிய மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கு நான் கடிதம் எழுதியிருக்கிறேன். இதனை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். ஏற்கெனவே என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூட இது தொடர்பான கருத்தை நான் பதிவு செய்துள்ளேன். அதனை செய்வார்கள் என்று நான் நம்புகிறேன்" என நாராயணசாமி தெரிவித்தார்.