மத்திய அரசின் நிதியில் தமிழகம் 15 சதவீத நிதி பெறுகிறது என, பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் திருப்பதி நாராயணன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத்தலைவர் கலிவரதன் தலைமையில் இன்று (ஜூலை 12) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் திருப்பதி நாராயணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"தப்லீக் மாநாட்டுக்குச் சென்று திரும்பியவர்கள், கோயம்பேடு சந்தைத் தொழிலாளர்கள், சென்னையிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பியவர்களால் தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. இந்திய அளவில் அதிக பரிசோதனை நடைபெறும் மாநிலமும் தமிழகமேயாகும்.
மத்திய அரசு மாநில அரசுக்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்கி வருகிறது. மத்திய அரசின் நிதியில் தமிழகம் 10 முதல் 15 சதவீத நிதியைப் பெறுகிறது. தமிழகத்திற்கு கடந்த 4 மாதங்களில் மத்திய அரசு ரூ.30 ஆயிரம் கோடிக்கு நிதியுதவியாகவும், பொருளுதவியாகவும் செய்துள்ளது. ஆனால், காங்கிரஸ், திமுக இதனை வைத்து மலிவான அரசியல் செய்து வருகிறது".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.