5 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், துடியலூர் காவல் நிலையம் மூடப்பட்டது.
கோவை மாவட்டக் காவல்துறைக்கு உட்பட்ட துடியலூர் காவல் நிலையத்தில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என 45-க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். துடியலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில், ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உட்பட 35 காவலர்களுக்குக் கடந்த 9-ம் தேதியும், 10 காவலர்களுக்குக் கடந்த 10-ம் தேதியும் கரோனா தொற்றைக் கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 9-ம் தேதி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகள் இன்று (ஜூலை 12) வெளியாகின. இதில், 44 வயதான ஒரு ஆண் தலைமைக் காவலர், 30 வயதுக்குட்பட்ட ஒரு பெண் காவலர், 3 ஆண் காவலர்கள் என 5 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சுகாதாரத்துறையினர் தொற்று உறுதி செய்யப்பட்ட 5 காவலர்களையும் மீட்டு சிகிச்சைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும், காவலர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, துடியலூர் காவல் நிலையம் தற்காலிகமாக இன்று காலை மூடப்பட்டது. இதற்குப் பதிலாக, அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்துக்கு துடியலூர் காவல் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டது. இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு துடியலூர் காவல் நிலையம், மேற்கண்ட திருமண மண்டபத்தில் தற்காலிகமாகச் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறையினர் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வசித்து வந்த பகுதியைத் தனிமைப்படுத்தி, அந்த இடங்கள் மற்றும் துடியலூர் காவல் நிலையத்தில் கிருமிநாசினி தெளித்தனர். தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இரண்டாவது கட்டமாக மேற்கொள்ளப்பட்ட 10 காவலர்களுக்கான பரிசோதனை முடிவுகள் நாளை (ஜூலை 13) வெளியாகும் எனத் தெரிகிறது.
சூலூர் காவல் நிலையம் மூடல்
அதேபோல், சூலூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த 36 வயதான காவலர் ஒருவருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, சூலூர் காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. அருகில் உள்ள போக்குவரத்துக் காவல்துறைக்குட்பட்ட இடத்தில் சூலூர் காவல் நிலையம் தற்காலிகமாக இயங்கி வருகிறது. மேலும், சூலூர் காவல் நிலையம், அருகில் உள்ள காவலர்கள் குடியிருப்புப் பகுதி தனிமைப்படுத்தப்பட்டது. அங்கு சுகாதாரத்துறையினர் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.