தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வகையில் காங்கிரஸ் வியூகம் வகுக்கும் என அக்கட்சியின் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கள் கூட்டம், கட்சித் தலைமை அலுவலகமான சென்னை சத்திய மூர்த்தி பவனில் நேற்று நடந்தது. இளங்கோவன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் தேசிய செயலாளர் சு.திருநாவுக்கரசர், தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு, மாநில மகளிரணி தலைவர் எஸ்.விஜயதாரணி, ஊடகப் பிரிவு தலைவர் ஆ.கோபண்ணா, எஸ்.சி. பிரிவு மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும் மாவட்டத் தலைவர்களும் பங்கேற்றனர்.
பின்னர் நிருபர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் பலத்தை எதிர்க்கட்சிகள் உணர்ந்துள்ளன. அதனால், கூட்டணி அமைக்க விரும்பும் புதிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை சரியாகப் பயன்படுத்தி வரும் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதில் காங்கிரஸ் பிரதான பங்கு வகிக்கும். அதற்கேற்றவாறு அரசியல் வியூகம் வகுப்போம்.
மகளிர் சுயஉதவிக் குழு திட்டங்களை ரத்து செய்வதைக் கண்டித்தும், முழு மதுவிலக்கை வலியுறுத்தியும் மகளிர் காங்கிரஸ் சார்பில் வரும் 7-ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும். விழுப்புரம் மாவட்டம் சேஷசமுத்திரம் கிராமத்தில் தலித்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து மாநில எஸ்.சி. பிரிவு சார்பில் விழுப்புரத்தில் 9-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
காங்கிரஸ் மூத்த தலைவரான 83 வயதான குமரிஅனந்தன், முழு மதுவிலக்கை வலியுறுத்தி அக்டோபர் 2-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து பாதயாத்திரை தொடங்குகிறார். இதை காங்கிரஸ் கட்சியே முன்னின்று நடத்தும். மதுவிலக்கை வலியுறுத்தியும் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்களைக் கண்டித்தும் அக்டோபர் 2-ம் தேதி தமிழகம் முழுவதும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்க முடிவு செய்துள்ளோம்.
உலக முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டுமானால் ஆட்சியின் முதல் ஆண்டிலேயே முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியிருக்க வேண்டும். ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் மாநாடு நடத்தி எந்தப் பலனும் இல்லை. பல்வேறு பிரச்சினைகளில் இருந்து மக்களை திசைதிருப்பவே இந்த மாநாட்டை தமிழக அரசு நடத்துகிறது.
காங்கிரஸ் ஆட்சியில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதுபோல பாஜக அரசும் செய்ய வேண்டும்.
இவ்வாறு இளங்கோவன் கூறினார்.