விழுப்புரம்: திண்டிவனம் திமுக 5-வது வார்டு கிளை செயலாளர் விஜயகுமார், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த ஜூலை 5-ம் தேதி உயிரிழந்தார். அரிசி ஆலையில் கணக்காளராக இருந்த இவரது வருமானத்தையே நம்பியிருந்த குடும்பத்தினர் தற்போது பரிதவிக்கின்றனர்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்றுவரும் செஞ்சி எம்எல்ஏ மஸ்தானுடன் காரில் செல்லும்போது, தொற்று ஏற்பட்டு உயிரிழந்த விஜயகுமாரின் குடும்பத்துக்கு கட்சி சார்பில் எவ்வித நிவாரணமும் வழங்கவில்லை என்று திமுக நிர்வாகிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து, விஜயகுமாரின் மகள் மோனிஷா கூறியபோது, “என் சகோதரிகள் இருவருக்கு திருமணமாகிவிட்டது. 10-ம் வகுப்பு முடித்துள்ள நான், தொடர்ந்து படிக்க வசதியில்லாததால் படிப்பை நிறுத்திவிட்டேன். பிளஸ் 2 முடித்துள்ள என் சகோதரர் மின் சாதனங்கள் பழுது நீக்கும் வேலை செய்கிறார். அம்மாவுக்கு நாங்கள்தான் துணை. எங்களுக்கு திமுக தலைமை, தகுந்த நிவாரணம் வழங்கும் என நம்புகிறோம்” என்றார்.
இதுகுறித்து திண்டிவனம் நகர திமுக செயலாளர் கபிலனிடம் கேட்டபோது, “விஜயகுமார் உயிரிழந்தது குறித்து கட்சித் தலைமை, முன்னாள் அமைச்சர் பொன்முடி, மாவட்டச் செயலாளர் எம்எல்ஏ மஸ்தான் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவரது குடும்பத்துக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்” என்றார்.