பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

நிலத்தகராறில் எம்எல்ஏவின் தந்தை துப்பாக்கியால் சுட்டதாக புகார்: செங்கல்பட்டு எஸ்.பி விசாரணை

செய்திப்பிரிவு

திருப்போரூர் எம்எல்ஏ இமயவரம்பனின் தந்தை லட்சுமிபதி. இவருக்கு செங்காடு பகுதியில் நிலம் உள்ளது. அதே இடத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் குமார் என்பவருக்கும் 15 ஏக்கர் நிலம் உள்ளது. லட்சுமிபதிக்கும், குமாருக்கும் இடையில் ஏற்கெனவே நிலத்தகராறு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையில் லட்சுமிபதியின் இடத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. அந்த தண்ணீரை வெளியேற்ற லட்சுமிபதி பணியாட்கள் மூலம் பள்ளம் எடுத்துள்ளனர். அப்போது தண்ணீர் குமாரின் இடத்தில் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையில் தகராறு, கைகலப்பு ஏற்பட்டது. இரு தரப்பும் ஆயுதங்களால் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

அப்போது எம்எல்ஏவின் தந்தை லட்சுமிபதி துப்பாக்கியை எடுத்து சுட்டதாக குமார் தரப்பினர் புகார் தெரிவித்தனர். இது உண்மையா என போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

நாட்டுத் துப்பாக்கியா?

இதுகுறித்து காவல் துறை தரப்பில் கேட்டபோது, “நாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதால் உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றார்.

SCROLL FOR NEXT