மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கு 2 ஆண்டுகள் பூர்த்தியாகாத நிலையில், அவருக்குப் பரோல் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. குறைந்த ஆண்டுகள் தண்டனை பெற்ற கைதிகளுக்கான விதியில் திருத்தம் வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கடத்தல் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்ததாக சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த தமிழ்செல்வனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த 2019 ஜூலை முதல் புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வரும், அவரது மேல் முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், கல்லூரியில் படிக்கும் 2 மகள்களின் கல்விச் செலவுக்குப் பணம் ஏற்பாடு செய்யவும், இதய நோய்க்கு சிகிச்சை பெற ஏதுவாகவும் தமிழ்செல்வனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கக் கோரி அவரது மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
2 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பிறகே தண்டனைக் கைதிகளுக்குப் பரோல் வழங்க வேண்டும் என சிறை விதிகள் உள்ளதாகவும், தமிழ்செல்வன் ஓராண்டு நான்கு மாதங்கள் மட்டுமே தண்டனை அனுபவித்துள்ளதாகவும் அரசுத் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழ்செல்வனுக்கு ஆகஸ்ட் 7-ம் தேதி வரை பரோல் வழங்கி உத்தரவிட்டனர். இந்தக் காலகட்டத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை கே.கே.நகர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், பரோல் வழங்கும் சிறை விதிகள், அதிக ஆண்டுகள் மற்றும் ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கும், குறைந்த ஆண்டுகள் தண்டனை பெற்ற கைதிகளுக்கும் ஒரே மாதிரியாக உள்ளதால், கைதிகளின் உரிமை பாதிக்கப்படுவதாகத் தெரிவித்த நீதிபதிகள், 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை பெற்ற கைதிகளுக்குப் பரோல் வழங்குவது தொடர்பான சிறை விதிகளில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் அரசுக்கு அறிவுறுத்தினர்.