தமிழகம்

தூய்மைப் பணியாளர்களின் துயரம் நீங்குமா?- அறிவித்த ஊதிய உயர்வை அரசு அமல்படுத்துவது எப்போது?

கா.சு.வேலாயுதன்

கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே, மிக முக்கியமான களப் பணியைச் செய்துவரும் தூய்மைப் பணியாளர்களுக்கு, அரசு அறிவித்த ரூ.1,000 தொகுப்பூதிய உயர்வு இதுவரை வழங்கப்படாதது இவர்களைத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

மாதம் ரூ.2,600 தொகுப்பூதியத்தில் தமிழகத்தின் ஊராட்சிகள்தோறும் பணியமர்த்தப்பட்டவர்கள் இந்தத் தூய்மைப் பணியாளர்கள். இவர்கள் அன்றாடம் காலை 7 மணி முதல் மதியம் 12 மணிவரை தங்களுக்கென ஒதுக்கப்பட்ட 75 வீடுகளுக்குச் செல்ல வேண்டும். அங்கே சேரும் குப்பைகளைச் சேகரித்து வந்து, அவற்றை மக்கும் குப்பை, மக்காத குப்பை என இரு வகையாகப் பிரிக்க வேண்டும். ஊராட்சியால் ஒதுக்கப்பட்டிருக்கும் உரக்குழியில் மக்கும் குப்பையைக் கொட்டி உரமாக்க வேண்டும். மக்காத குப்பைகளைச் சேகரித்துத் தேவைப்படும் கம்பெனிக்கு விற்பது அல்லது அவற்றை எரித்து வேறு உபயோகத்திற்குத் தருவது என்பன போன்ற வேலைகளை இவர்கள் செய்கிறார்கள்.

இப்படியான கிராமப்புறத் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் தமிழகத்தில் 12,524 ஊராட்சிகளில் மொத்தம் 66 ஆயிரத்து 25 பேர் பணியமர்த்தப்பட்டனர். ஆரம்பக் காலத்தில் இவர்களுக்கு 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணியும், சம்பளமும் தரப்பட்டன. ஒருவர் வருடத்தில் 100 நாட்கள் பணிபுரிந்துவிட்டால் அடுத்த 100 நாட்கள் பணி வாய்ப்பு அதே ஊரைச் சேர்ந்த இன்னொருவருக்குக் கிடைக்கும். அந்த வகையில் முதலாமவருக்கு 100 நாள் பணி வாய்ப்பு அடுத்த வருடம்தான் வரும். 2014-15-ல் ஒருநாள் ஊதியமாக ரூ.167 பெற்றுவந்த இவர்களுக்கு, 2015-16-ல் ரூ.183, 2016-17-ல் ரூ.203, 2017-18-ல் ரூ.205 என ஊதியம் உயர்த்தப்பட்டுவந்தது. 2018 ஏப்ரல் 1-ம் தேதி முதல் இவர்களுக்கு வருடம் முழுக்க வேலை தரத் திட்டம் உருவாக்கப்பட்டது.

அதன்படி ஒருநாள் ஊதியமாக ரூ.100 என நிர்ணயித்து, மாதம் 26 நாட்கள் வேலை நாட்களாகக் கொண்டு ரூ.2,600 தொகுப்பூதியத்தை அரசு வழங்கியது. அத்தோடு இவர்கள் தூய்மைப் பணியாளர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். தினசரி ரூ.100 என்பது அன்றாடம் காலை டீ, டிபன் செலவுக்குக் கூட காணாத நிலையில், எப்படியும் ஓரிரு வருடங்கள் பணி செய்தால் நிரந்தரப் பணியில் இருக்கும் தூய்மைப் பணியாளர்கள் போல் மாதம் ரூ.7 ஆயிரம், ரூ. 8 ஆயிரம் சம்பளம் பெறும் தகுதிக்கு உயர்வோம் என்ற நம்பிக்கையில் அவர்கள் பணியாற்றி வந்தனர். ஆனால், அந்த நம்பிக்கை இதுவரை நிறைவேறவில்லை.

கடந்த ஏப்ரல் முதல் இவர்களின் தொகுப்பூதியத்தை ரூ.3,600 ஆக மாற்றி வழங்கப்போவதாக அறிவித்தார் முதல்வர். அந்த அறிவிப்பு அமலாவதற்குள் கரோனா வந்துவிட, கூடுதல் பணிச் சுமை ஏற்பட்டது. ஊராட்சிகளில் தூய்மைப் பணியாளர்கள் மிகக் குறைவே. சாக்கடை சுத்தம் செய்வது, தெருக் குப்பையைக் கூட்டி வழிப்பது போன்ற பணிகளையே செய்ய முடியாத நிலையில் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று பிளீச்சிங் பவுடர் போடுவது போன்ற பணிகளிலும் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். ஆனாலும், ஏப்ரல் மாதம் உயர வேண்டிய ரூ.1,000 ஊதியம் இப்போது வரை அமல்படுத்தப்படவில்லை.

இதுகுறித்து நம்மிடம் பேசிய கோவைப் பகுதி தூய்மைப் பணியாளர்கள், “சில ஊராட்சிகளில் நாங்கள் படும் கஷ்டத்தைப் பார்த்து ஊராட்சித் தலைவர்களோ, ஊர்ப் பெரிய மனிதர்களோ அவ்வப்போது சில உதவிகள் செய்கிறார்கள். மற்றபடி நாங்கள் எதுவுமே யாரிடமும் கேட்பதுமில்லை. யாரும் எதுவும் கொடுக்கவுமில்லை. ஆனால், வீடு வீடாகப் போய் குப்பை வாங்குவதால் எங்களுக்கும் நிரந்தரத் தூய்மைப் பணியாளர்கள் போல் சம்பளம் வருகிறது என்று நினைத்துக்கொள்கிறார்கள். அதனால் ஒரு நாள் கொஞ்சம் தாமதமாகப் போனால்கூட, ‘ஏன் லேட்டு?’ என்று கடிந்துகொள்கிறார்கள்.

அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் வேறு அடிக்கடி வருகிறார்கள். அப்போது கூடுதல் வேலையாகிறது. எங்கிருந்து கரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் இருந்தாலும் ஈடுபாட்டுடன் இந்தப் பணியைச் செய்கிறோம். எங்கள் நிலைமையை அரசு உணரும் என்று நம்புகிறோம்” என்றனர்.

இவர்களுக்காகக் கோரிக்கை வைக்கும் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த தன்னார்வலர் நடராஜன் கூறுகையில், “சத்தியமங்கலம் ஒன்றியத்தில் 15 ஊராட்சிகளில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்கள் வேலையையும், பணிபுரியும் நேரத்தையும் பார்த்தாலே கசியாத மனமும் கசிந்துவிடும். அப்படியானவர்களுக்கு 110 விதியின் கீழ் அறிவித்த ரூ.1,000 கூடுதல் தொகுப்பூதியத்தைக்கூட இன்னமும் கொடுக்காமல் இருக்கிறார்கள் என்பதுதான் வேதனை.

அது எப்படியும் அரியர்ஸ் போட்டு வந்துவிடும் என அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால், இப்போதைய தேவைக்கு இவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாவதை யாரும் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. இனியாவது அரசு இதைக் கவனத்தில் கொண்டு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT