தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை கோட்டை விட்டதால் மதுரை உள்பட தென் மாவட்டங்களில் ‘கரோனா’ தொற்று நோய் வேகமாகப் பரவுவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னையில் தற்போது கரோனா தொற்றுப் பரவல் குறையத் தொடங்கியுள்ளது. அதற்கு அங்கு எடுக்கப்பட்ட சுகாதார தடுப்பு முன் நடவடிக்கைகளே முக்கியக் காரணம் எனக்கூறப்படுகிறது. ஆனால், தென் மாவட்டங்களில் தற்போது ‘கரோனா’ தொற்றுப் பரவல் வேகம் அதிகரித்துள்ளது.
நேற்று ஒரே நாளில் மதுரையில் 192 பேருக்கும், தூத்துக்குடியில் 194 பேருக்கும், கன்னியாகுமரியில் 105, ராமநாதபுரத்தில் 82 பேருக்கும், விருதுநகரில் 143 பேருக்கும் இந்தத் தொற்று நோய் ஏற்பட்டது.
மதுரை மாவட்டத்தில் தற்போது தினமும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேருக்கு ‘கரோனா’ பரிசோதனை செய்வதாக அதிகாரிகள் கூறினாலும், அதன் முடிவுகள் 3-வது, 4-வது நாளே நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படுகிறது. அதுவரை பரிசோதனை செய்தவர்கள், தங்களுக்கு இருக்கிறதா? இல்லையா? என்று தெரியாமல் நிம்மதியை இழக்கிறார்கள். சிலர் அதற்குள்ளாகவே அவர்கள் குடும்பத்தினருக்கும், அப்பகுதி மக்களுக்கும் பரப்பிவிடுகின்றனர்.
சிலருக்கு நோய் முற்றி தாமதமாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதால் உயிரிழக்கவும் செய்கின்றனர். இதுவரை 101 நோயாளிகள் மதுரையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா, சென்னை மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த பெரும்பாலானோர் கடந்த இரு வாரம் முன் வரை மிக சாதாரணமாக மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்குள் ‘கரோனா’ பரிசோதனை செய்யாமலே வீடுகளுக்குச் சென்று தங்கிவிட்டனர். அதுபோல், மதுரையில் இருந்து இ-பாஸ் பெற்று திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசிக்குச் சென்றவர்களை, அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறையும், மதுரை மாவட்ட சுகாதாரத்துறையும் பரிசோதனை செய்து அனுப்பவில்லை.
பகல் வேளையில் சென்றவர்களை மட்டும் தென் மாவட்ட எல்லைகளில் சுகாதாரத்துறை மறித்து அவர்களைப் பரிசோதனை செய்து தொற்று உறுதி செய்தோரை மருத்துவமனைக்கும், இல்லாதவர்களை வீடுகளிலே தனிமைப்படுத்திக் கொள்ள அனுப்பி வைத்தனர்.
இந்த நோய்த் தொற்று தமிழகத்தில் பரவத்தொடங்கிய ஆரம்பம் முதல் கடந்த 2 வாரம் முன் வரை மதுரை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் பெரும்பாலானோரை மாவட்ட சுகாதாரத்துறை ‘கரோனா’ பரிசோதனை செய்யாமலே அவர்களிடம் முகவரி, செல்போன் நம்பர் மட்டும் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதுபோல் பரவை மார்க்கெட்டிற்கு வெளிமாநிலங்களில் இருந்து காய்கறி கொண்டு வந்த லாரி டிரைவர்கள், தொழிலாளர்களை ‘கரோனா‘ பரிசோதனை செய்யாமலே அனுமதித்ததும் மதுரையின் இன்றைய நிலைமைக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.
மாநகராட்சிப் பகுதியில் தற்பேது 150க்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவப் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகிறது. ஆனால், புறநகர் கிராமங்களில் பெரிய அளவில் மருத்துவ முகாம்களுக்கும், ‘கரோனா’ பரிசோதனைக்கும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
சுகாதாரத்துறையின் இந்த அலட்சியத்தால் தற்போது புறநகர் கிராமங்களிலும் மாநகராட்சியைப் போல் இந்தத் தொற்று நோய் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.