தமிழகம்

குன்றக்குடி அடிகளாரின் 96-வது பிறந்த நாள்!-சிலைக்கு அமைச்சர் பாஸ்கரன் மாலை அணிவித்து மரியாதை

குள.சண்முகசுந்தரம்

தவத்திரு குன்றக்குடி பெரிய அடிகளார் தெய்வசிகாமணி அருணாச்சல தேசிக பரமாச்சாரியாரின் 96-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குன்றக்குடியில் அடிகளார் அருளாலய வளாக மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு கதர் மற்றும் கிராமத் தொழில் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .

இந்த நிகழ்வில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வி.ஜெயகாந்தன், முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ, முன்னாள் எம்.பி. செந்தில்நாதன், ஆதீனப் புலவர் மரு.பரமகுரு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். முன்னதாகக் குன்றக்குடி அடிகளார் அருளாலயத்தில் வழிபாடும் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கரோனா காலத்து மூலிகைத் தேநீர் வழங்கப்பட்டது.

‘குன்றக்குடி அடிகள்’ என்றழைக்கப்பட்ட குன்றக்குடி பெரிய அடிகளார் (ஜூலை 11, 1925- ஏப்ரல் 15, 1995) சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சு, எழுத்து, கலை எனப் பல துறைகளிலும் தனித்திறன் கொண்ட ஆளுமையாகத் திகழ்ந்தவர். கிராமங்களையும் தற்சார்பு நிலைக்கு மாற்ற வேண்டும் என்பதில் அழுத்தமான நம்பிக்கை கொண்டிருந்த அடிகளார், அதன்படி குன்றக்குடி கிராமத்தை முன்மாதிரிக் கிராமமாக மாற்றிக் காட்டியவர்.

அடிகளாருக்குப் பெற்றோர் வைத்த பெயர் அரங்கநாதன். தருமபுர ஆதீனத்தில் தம்பிரானாக சந்நியாசம் வாங்கிய போது ஆதீன மடம் இவருக்குச் சூட்டிய பெயர் கந்தசாமி தம்பிரான் பரமாச்சாரியார். அதைத் தொடர்ந்து குன்றக்குடி மகா சந்நிதானமாகப் பட்டம் சூட்டிய பொழுது தெய்வசிகாமணி அருணாசலத் தேசிகப் பரமாச்சாரியார் ஆனார்.

பள்ளிப் பருவத்திலேயே தமிழ்ப் பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளையிடம் தினம் ஒரு திருக்குறள் ஒப்பித்துக் காலணா பெறுவது அரங்கநாதரின் வழக்கம். அப்படி அரங்கநாதரின் வாழ்வை உயர்த்திய திருக்குறள், பின்னாளில் அடிகளாரான அவருக்குப் பொதுநெறி ஆகியது. ’உலகத் திருக்குறள் பேரவை’ என்னும் அமைப்பைத் தொடங்கிய அடிகளார், திருக்குறளைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்து குறளுக்குப் பெருமை சேர்த்தவர். இப்போது தற்போதைய அடிகளார் பொன்னம்பல தேசிகப் பரமாச்சாரியாரின் தலைமையில் செயல்பட்டு வரும் உலகத் திருக்குறள் பேரவை, திருக்குறளுக்குப் பெருமை சேர்க்கும் சேவையைச் செவ்வனே செய்துவருகிறது.

குன்றக்குடி பெரிய அடிகளாருக்குள் தீண்டாமை விலக்கு உணர்வும், மனிதநேயப் பண்பும் வேரூன்றக் காரணமாக இருந்தவர் விபுலானந்த அடிகள். பிற மடாதிபதிகளைப் போல மக்களைவிட்டு ஒதுங்கி மடத்துக்குள் முடங்கி இருக்காமல் மக்களோடு மக்களாய் இருந்து, காவிக்குள் தெய்வீகத்தையும் கருத்தில் பகுத்தறிவும் கொண்ட அற்புதத் துறவியாகத் திகழ்ந்தவர் குன்றக்குடி அடிகளார்.

பல்லக்கு பவனிகளைப் புறந்தள்ளிவிட்டு தன்னந்தனியாகச் சேரிக்குள் சென்று, தீண்டத்தகாதவர்கள் என்று புறம்தள்ளப்பட்டவர்களைக் கண்டு அவர்களின் துயர் துடைத்தவர். மடாதிபதியாக இருந்தபோதும், கடவுள் மறுப்புக் கொள்கையைக் கொண்ட பெரியாருக்கும் அண்ணாவுக்கும் தோழராய் இருந்தவர். பிற்காலத்தில் தமிழக முதல்வர்கள் கருணாநிதி, எம்ஜிஆர் உள்ளிட்டவர்களாலும் ஒரேமாதிரியாக மதிக்கப்பட்டவர்.
தெய்வப்பணி என்பது மக்களின் சேவைப் பணியே என்பது அடிகளாரின் கொள்கை. தீண்டாமையை எதிர்த்துப் போராடிய அடிகளார், குன்றக்குடி திருமடத்துக்குள் பட்டியலினத்து மக்களையும் அழைத்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து சமபந்தி போஜனம் செய்ய வைத்தவர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் பட்டியலினத்து மக்களை வைத்தியநாத ஐயர் அழைத்துச் சென்றபோது, தானும் உடன் சென்றவர் அடிகளார்.

மண்டைக்காடு சாதிக் கலவரத்தில் நவகாளிக் காந்தியாக மாறி, கலவரப் பகுதிக்குள் நுழைந்து அமைதியை நிலைநாட்டியவர். அந்த சமயத்தில் மீனவ மக்களுக்குள் இணக்கமான சூழலை உருவாக்க வேண்டும் என்பதற்காக, தான் ஒரு மடாதிபதி என்ற மரபுகளை எல்லாம் உடைத்து கைகளில் மீன்களை ஏந்தி விற்று அதில் கிடைத்த பணத்தை மீனவர்களுக்குத் தந்து உதவியவர் அடிகளார். துறவுக் கோலத்தில் தூய தமிழ்த் தொண்டராக, சமுதாயப் பணியில் சமூக நீதி காத்த சீலராக, சமூகத்தைச் செதுக்கும் சிற்பியாக விளங்கியவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தெய்வசிகாமணி அருணாச்சல தேசிக பரமாச்சாரியார்.

தமிழக மேலவை உறுப்பினராக இருந்த அடிகளார், ‘திருக்குறளைத் தேசியப்படுத்த வேண்டும்’ என்று முழங்கியவர். அப்பர் விருந்து, அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர், திருவாசகத்தேன், தமிழமுது உள்ளிட்ட 10 சமய இலக்கிய நூல்களை எழுதியிருக்கும் அடிகளார், திருவள்ளுவர், திருவள்ளுவர் காட்டும் அரசியல், சிலம்புநெறி, பாரதிதாசன் உலகம் உள்ளிட்ட 13 இலக்கிய நூல்களையும் எழுதியிருக்கிறார். அருள்நெறி முழக்கம், ஆலயங்கள் சமுதாய மையங்கள், சிலம்பு நெறி உள்ளிட்ட அடிகளார் எழுதிய 28 நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT