"சிதம்பரம் சீனா பின் வாங்கியதை வரவேற்கிறாரா அல்லது சீன ராணுவத்தை வரவேற்கிறாரா என்று தெரியவில்லை," என பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்தார்.
சில தினங்களுக்கு முன்னர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "எல்லையில் சீனப்படைகள் பின்வாங்கி இருப்பதை நான் வரவேற்கிறேன் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சீன துருப்புக்கள் பின்வாங்கியதை நன் வரவேற்கிறேன். சீன துருப்புக்கள் விடுவிக்கப்பட்ட இடத்தையும், இப்போது அவர்கள் இருக்கும் இடத்தையும் யாராவது நமக்குச் சொல்வார்களா? இதேபோல் இந்திய துருப்புக்கள் விடுவிக்கப்பட்ட இடம் எது? எந்தவொரு துருப்புக்களும் - சீனா அல்லது இந்திய - எல்.ஏ.சியின்(கட்டுப்பாட்டுக் கோடு) ஒரு பக்கத்திலிருந்து மறுபுறம் நகர்ந்ததா? இந்த கேள்விகளுக்கான பதில்கள் அவசியம். ஏனென்றால் ஜூன் 15 அன்று என்ன நடந்தது, எங்கு நடந்தது என்பதை அறிய இந்திய மக்கள் புதையல் வேட்டையில் உள்ளனர்" எனக் கூறியிருந்தார்.
இது குறித்து காரைக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, "சிதம்பரம் சீனா பின் வாங்கியதை வரவேற்கிறாரா அல்லது சீன ராணுவத்தை வரவேற்கிறாரா என்று தெரியவில்லை. ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதால் சிதம்பரத்துக்கு ஏதோ ஆகிவிட்டது. அதன் காரணமாகவே இப்படியெல்லாம் பேசுகிறார்.
இந்து விரோதசத்தி கைகளில் வியாபாரிகள் சங்கம் மாட்டிக்கொண்டு உள்ளது.
சாத்தான்குளம் விவகாரத்தை சிபிஐ கையில் அரசு ஒப்படைத்துள்ளது. அதில் கடுமையான நடவடிக்கைகள் இருக்கும்.
சேவாபாரதிக்கு எதிராக அவதூறு பரப்பும் திருமாவளவன், உதயநிதி ஸ்டாலின் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உதயநிதி கொஞ்சமாவது அரசியல் படிக்க வேண்டும்.
ஊடகங்கள் நடுநிலையாக செயல்பட வேண்டும்.
ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் எவ்வளவு முக்கியத்துவம் என்பது இந்த கரோனா காலகட்டத்தில் தெரிந்து கொண்டோம்.
உலகமே வியக்கும் வகையில் உலகத்திலேயே முதல் ஆளாக கரோனாவிற்கு தடுப்பு மருந்து இந்தியா கண்டுபிடித்து உள்ளது. அதை பரிசோதனை செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசியல் செய்ய விஷயம் கிடைக்காத காரணத்தால் திமுக, காங்கிரஸ் கும்பல் எல்லா விஷயங்களிலும் பொய் பரப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது" என்றார்.