சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கு ஆவணங்களை சிபிசிஐடி போலீஸார் இன்று மாலை சிபிஐ அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைத்தனர். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை சிபிஐ அதிகாரிகள் உடனடியாக தொடங்கினர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டதால், மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவின் பேரில் இடைக்கால ஏற்பாடாக சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணையில் அடிப்படையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை மற்றும் காவலர்கள் முருகன், முத்துராஜ், செல்லத்துரை, சாமத்துரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ் ஆகிய 10 பேரையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் இந்த வழக்கு விசாரணையை சிபிஐ கடந்த 6-ம் தேதி முறைப்படி ஏற்றுக் கொண்டது. இதையடுத்து சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக டெல்லி சிபிஐ போலீஸார் கடந்த 7-ம் தேதி தனியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.
இந்த முதல் தகவல் அறிக்கையின் நகல் அன்றைய தினமே மதுரை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக நேரடி விசாரணை நடத்துவதற்காக டெல்லியில் இருந்து, இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட சிபிஐ கூடுதல் கண்காணிப்பாளர் (ஏடிஎஸ்பி) விஜய்குமார் சுக்லா, ஆய்வாளர்கள் அனுராக் சின்ஹா, பூரன் குமார், உதவி ஆய்வாளர்கள் சுஷில்குமார் வர்மா, சச்சின், காவலர்கள் அஜய்குமார், சைலேந்திரகுமார், பவன்குமார் திரிபாதி ஆகிய 8 பேர் கொண்ட குழுவினர் இன்று மாலை தூத்துக்குடி வந்தனர். விமானம் மூலம் மதுரை வந்து, அங்கிருந்து கார் மூலம் மாலை 4 மணியளவில் அவர்கள் தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகம் வந்தனர்.
இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிசிஐடி விசாரணை அதிகாரியான டிஎஸ்பி அணில்குமார், சிபிஐ ஏடிஎஸ்பி விஜய்குமார் சுக்லாவிடம் ஒப்படைத்தார்.
இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் இம்மாதம் 1-ம் தேதி முதல் விசாரணை நடத்தி வந்தர். அப்போது பல்வேறு தடயங்கள், ஆவணங்கள், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியிருந்தனர்.
மேலும், 20-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர். இவை அனைத்தையும் சிபிஐ அதிகாரிகளிடம் முறைப்படி சிபிசிஐடி போலீஸார் ஒப்படைத்தனர். மேலும், வழக்கு தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகளுடன் சிபிஐ அதிகாரிகள் சிறிது நேரம் ஆலோசனையும் நடத்தினர்.
முறைப்படி வழக்கு ஆவணங்களை பெற்றதை தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐ அதிகாரிகள் உடனடியாக தொடங்கினர்.
சிபிஐ அதிகாரிகள் சாத்தான்குளம், கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்துகின்றனர். இந்த விசாரணை மற்றும் சிபிசிஐடி ஒப்படைத்த ஆவணங்கள்,
தடயங்கள், சாட்சியங்கள் அடிப்படையில் இந்த வழக்கை கொலை வழக்காக சிபிஐ அதிகாரிகள் மாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவல்துறையினரை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க அடுத்த ஓரிரு நாளில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவும் சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை மதுரை தலைமை குற்றவியல் நடுவர்மன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளதால், இனிமேல் இந்த வழக்கு விசாரணை மதுரை நீதிமன்றத்தில் நடைபெறும் என்றும், தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் உள்ள இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் மதுரை நீதிமன்றத்துக்கு மாற்றப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.