மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம் 
தமிழகம்

கேரளாவில் தங்கி படித்து 10-ம் வகுப்பில் 95% எடுத்த பழங்குடி மாணவிக்கு ஸ்டாலின் ரூ.1 லட்சம் நிதியுதவி

செய்திப்பிரிவு

கேரளாவில் தங்கி படித்து 10-ம் வகுப்பில் 95% எடுத்து தேர்ச்சியடைந்த பழங்குடி மாணவி ஸ்ரீதேவிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ரூ.1 லட்சம் கல்வியுதவி வழங்கினார்.

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் சரணாலயம் பகுதியில் அமைந்துள்ளது பூச்சுகொட்டாம்பாறை. இங்கு முதுவர் பழங்குடி மக்கள் பெரும்பாலானோர் வசித்து வருகின்றனர். இங்கு பெண் குழந்தைகள் பள்ளி படிப்பை முடிப்பதே அரிய நிகழ்வாக உள்ளது.

இந்நிலையில், முதுவர் பழங்குடியில் பிறந்த ஸ்ரீதேவி என்ற மாணவி, அங்கிருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கேரள மாநிலம் சாலக்குடி சென்று அங்குள்ள 'மாடர்ன் ரெசிடன்ஷியல் ஸ்கூல்' எனப்படும் பழங்குடியின மாணவிகளுக்கான உண்டு - உறைவிடப் பள்ளியில் தங்கிப் படித்து 10-ம் வகுப்பில் 95% எடுத்து முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றார். மாணவியின் இந்த சாதனைக்கு பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அம்மாணவிக்கு கல்வி உதவியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ரூ.1 லட்சம் வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 10) தன் ட்விட்டர் பக்கத்தில், "உடுமலைப்பேட்டை, பூச்சிகொட்டாம்பாறையில் வீடு; கேரளாவில் படிப்பு; அம்மாநில அரசின் சிறப்பு பேருந்தில் பயணம்; 10-ம் வகுப்பில் 95% பெற்றிருக்கும் பழங்குடியின மாணவி ஸ்ரீதேவியிடம் பேசினேன்!

வனப்பகுதி மக்களுக்காக மருத்துவராகும் அவரது கனவை வாழ்த்தி, கல்வி உதவியாக ரூ.1 லட்சம் வழங்கினேன்!" என பதிவிட்டுள்ளார்.

அந்த நிதியுதவியை மாவட்ட திமுகவினர் மாணவியிடம் நேரடியாக வழங்கினர்.

உதவித்தொகையை நேரடியாக வழங்கிய திமுகவினர்
SCROLL FOR NEXT