உதகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சாக்லேட் என்று கூறி விற்ற சாக்லேட் தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் உதகையில் பல்வேறு விதங்களில் சாக்லேட் தயாரித்து ரஹ்மான் என்பவர் விற்று வந்தார். மேலும், சாக்லேட் அருங்காட்சியகமும் நடத்தி வந்தார்.
இந்நிலையில், நோய் எதிர்ப்பு தன்மையை அதிகப்படுத்தும் சாக்லேட் என்று கூறி விளம்பரப்படுத்தி சாக்லேட் விற்பனையில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்த உணவு பாதுகாப்பு துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று (ஜூலை 10 அங்கு சென்று ஆவணங்களை சரிப்பார்த்தனர்.
அதில் நோய் எதிர்ப்பு சக்தி உடைய சாக்லேட் தயாரிக்க எந்த அரசு நிறுவனத்திடமும் உரிமம் பெறவில்லை என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, சுகாதார துறையினர் சில சாக்லேட் மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு தொழிற்சாலையை மூடி சீல் வைத்தனர்
இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தங்க விக்னேஷ் கூறும்போது, "கொக்கோ பவுடரில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டு என்று எந்த அரசு நிறுவனமும் கூறவில்லை. இதுவரை ஆதாரம் எதுவுமில்லை. நோய் எதிர்ப்பை கூட்டும் என்று விளம்பரப்படுத்தி சாக்லேட் விற்று பொதுமக்களை ஏமாற்றியது குற்றம்.
மேலும் பேக்கரி உணவுப் பொருட்களை மட்டும் தயாரிக்க அவர் உரிமம் பெற்றுள்ளார். சாக்லேட் தயாரிக்க தனி உரிமம் உணவு பாதுகாப்பு நிறுவனத்திடம் பெற்றிருக்க வேண்டும் அதை செய்யாமல் சாக்லேட் தயாரித்து வந்துள்ளார். அதனால் தொழிற்சாலை மூடி சீல் வைக்கப்பட்டது" என்றார்.
கோவையில் மூலிமை மைசூர் பா என்று விளம்பரப்படுத்தப்பட்டது போல, உதகையில் நோய் எதிர்ப்பு சக்தி சாக்லேட் என விளம்பரப்படுத்தப்பட்டது. இது மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் சீல் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.