சுவர் இடிந்து அய்யம்மாள் உயிரிழந்த இடம் 
தமிழகம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழை: குடிசை வீடு இடிந்து மூதாட்டி உயிரிழப்பு; அதிகாரிகளை கண்டித்து முற்றுகைப் போராட்டம்

என்.சரவணன்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் பெய்த கனமழையால் குடிசை வீடு இடிந்து விழுந்து மனநலம் பாதித்த மூதாட்டி உயிரிழந்தார். அரசு அதிகாரிகள் செய்த தவறாமல் மூதாட்டியின் உயிர் பறிபோனதாக குற்றம்சாட்டிய பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் சுட்டெரித்தாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. வாணியம்பாடி, ஆம்பூர் சுற்றுவட்டாரப்பகுதிகளிலும், தமிழக - ஆந்திர எல்லைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் பாலாற்றின் துணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்றிரவு (ஜூலை 9) 9 மணியளவில் மாவட்டம் முழுவதும் பரவலமாக மழை பெய்தது. வாணியம்பாடி, ஆம்பூர், ஆலங்காயம், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. இன்று (ஜூலை 10) காலை 8 மணி நிலவரப்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம்:

ஆலங்காயம் 57.8.மி.மீ., ஆம்பூர் 47.5 மி.மீ., கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதி 55.4.மி.மீ., நாட்றாம்பள்ளி 10.4 மி.மீ., வாணியம்பாடி 50.3 மி.மீ., திருப்பத்தூர் 33.1 மி.மீ., என மழையளவு பதிவாகியிருந்தது.

இந்நிலையில், வாணியம்பாடி சுற்றுவட்டாரப்பகுதிகளில் பெய்த கனமழையால் நெக்கனாமலை அடுத்த புருஷோத்தமன் குப்பம் பகுதியைச் சேர்ந்த அய்யம்மாள் (60) என்பவரது வீடு இன்று அதிகாலை இடிந்து விழுந்தது. இதில், வீட்டுக்குள் உறங்கிக்கொண்டிருந்த அய்யம்மாள் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் ராகுல் காந்தி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இது குறித்து தகவல் அறிந்ததும், திருப்பத்தூர் தாலுகா காவல்துறையினர் அங்கு வந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். அய்யம்மாள் கடந்த 2016-ம் ஆண்டு தமிழக அரசின் பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டிக்கொள்ள அனுமதி கேட்டு ஊராட்சி அலுவலகத்தில் மனு அளித்தார்.

அதன்பேரில், 2017-18-ம் ஆண்டு அய்யம்மாளின் கணவர் சுப்பிரமணி பெயரில் பசுமை வீடு கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அந்த பணத்தை ஊராட்சி செயலாளர் முறைகேடாக கையாடல் செய்து அய்யம்மாள் வீடு கட்டிக்கொள்ள நிதி வழங்காததால், குடிசை வீட்டில் வசித்த வந்த அய்யம்மாளின் உயிர் தற்போது பறிபோனது. எனவே, பசுமை வீடு கட்டும் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி கொட்டும் மழையில் அப்பகுதி மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சுவர் இடிந்து அய்யம்மாள் உயிரிழந்த இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

இதைத்தொடர்ந்து, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி நேரில் வந்து விசாரணை நடத்தினார். அதில், பசுமை வீடு கட்ட தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் குறித்து நேரடியாக விசாரணை நடத்துவதாகவும், முறைகேடு நடந்திருந்தால் சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

இதைதொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இதைத்தொடர்ந்து, இடிபாடுகளில் சிக்கிய அய்யம்மாள் உடலை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

SCROLL FOR NEXT