சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் ஆவணங்கள் மதுரை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. இருவரைத் தாக்க பயன்படுத்திய லத்தியும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கு காலத்தில் குறிப்பிட்ட நேரம் தாண்டி செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததாக போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக பணிபுரிந்த ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 10 போலீஸாரை கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
சிபிஐ போலீஸார் இரு வழக்கு பதிவு செய்து இன்று முதல் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
தற்போது தந்தை, மகன் கொலை வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ளன. சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளதால் தென் மாவட்டங்களுக்கான சிபிஐ நீதிமன்றம் மதுரையில் இருப்பதால் தந்தை, மகன் கொலை வழக்கின் அனைத்து ஆவணங்களும் மதுரை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற ஹேமானந்தகுமார் முன்பு இன்று ஒப்படைக்கப்பட்டது.
ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை அடிக்க போலீஸார் பயன்படுத்திய லத்தி மற்றும் தடயங்களும் மதுரை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.
இதனிடையே இந்த வழக்கை விசாரிப்பதற்காக டெல்லியிலிருந்து சிபிஐ ஏடிஎஸ்பி விஜயகுமார் சுக்லா, தலைமையில் அனுராக் சிங், பவன்குமார் திவேதி, சைலேஷ்குமார் , சுஷில் குமார் வர்மா , அஜய்குமார், சச்சின், பூனம் குமார். ஆகிய7 பேர் கொண்ட அதிகாரிகள் குழு இன்று மதுரை வந்தது.
இவர்கள் மதுரை சிபிஐ அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். சென்னையில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகளும் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.
இதில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 போலீஸாரை காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது.