தமிழகம்

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து 4 மாவோயிஸ்ட்கள் வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

செய்திப்பிரிவு

தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ரூபேஷ் உள்ளிட்ட நான்கு மாவோயிஸ்ட்கள் தாக்கல் செய்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த மாவோயிஸ்ட் ரூபேஷ், அவரது மனைவி சைனா, அனூப் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரமணி, கண்ணன் ஆகியோரை கடந்த மே மாதம் தமிழ்நாடு போலீஸார் கோவையில் கைது செய்தனர். பின்னர் இவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

கைதுக்கான முகாந்திரம் இல்லை

இந்த உத்தரவை எதிர்த்து ரூபேஷ், சைனா, வீரமணி, கண்ணன் ஆகிய நான்கு மாவோயிஸ்ட்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர், அதில், “கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் உள்ள பேக்கரியில் நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது எங்களை கைது செய்தனர்.

ஆனால், கைதுக்கான முகாந்திரத்தைக் கூறவில்லை. எங்கள் மீதான குற்றச்சாட்டில் தெளிவு இல்லை. எனவே, அந்த குற்றச்சாட்டை, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்வதற்கான முகாந்திரமாகக் கருத முடியாது. நாங்கள் அனுப்பிய முறையீட்டை மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்கவில்லை.

கைது செய்து இரண்டு மாதங்களுக்குப் பிறகே எங்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தனர். எனவே, கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தது.

நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகியோர் கொண்ட அமர்வு இம்மனுக்களை விசாரித்து, மனுக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 12-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

SCROLL FOR NEXT