இயற்கை முறையில் விளைவிக்கப்படும் தரமான ஊட்டச்சத்து மிகுந்த பழங்கள், காய்கறிகள் பொதுமக்களுக்கு மலிவுவிலையில் கிடைப்பதற்கு தமிழகத்தில் 8 மாவட்டங்களில் தோட்டக்கலைத்துறை சார்பில் விற்பனை நிலையங்கள் தொடங்கப்படுகிறது.
மதுரையில் இன்று இந்த விற்பனை நிலையம் தொடங்கப்பட்டது.
‘கரோனா’ பரவும் இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் பொதுமக்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுப்பொருட்கள் சாப்பிடுவது அவசியமாக உள்ளது.
ஆனால், ரசாயண கலப்படம் இல்லாமல் இயற்கை முறையில் முறையில் விளைவிக்கப்படும் பொருட்கள் சந்தைகளில் கிடைப்பது அரிதாக உள்ளது.
அதனால், தற்போது தோட்டக்கலைத்துறை இயற்கை முறையில் விளைப்பொருட்களை விற்க தமிழகத்தில் மதுரை, கோவை, திருச்சி, சேலம், சென்னை, செங்கல்பட்டு, திருவாரூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தன்னுடைய விற்பனை நிலையங்களை தொடங்குகிறது.
விவசாயிகள் இயற்கை முறையில் உற்பத்தி செய்த காய்கறிகள், பழங்களை நேரடியாக தோட்டக்கலைத்துறை அவர்களிடம் இருந்து கொள்முதல் செய்து, இந்த விற்பனை நிலையங்களில் பொதுமக்களுக்கு விற்பனை செய்கிறது.
பொதுமக்களுக்கு மலிவு விலையில் ரசாயண கலப்படம் இல்லாத தரமான ஊட்டச்சத்து மிகுந்த காய்கறிகள், பழங்கள் கிடைப்பதை உறுதி செய்வதையும், விவசாயிகளுக்கு இடைத்தரகர்கள் இல்லாமல் விளைப்பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கவும் செய்வதற்கே தோட்டக்கலைத்துறையின் இந்த விற்பனை நிலையங்களுடைய நோக்கமாகும்.
மதுரை மாவட்டத்தில் அண்ணாநகர் உழவர் சந்தையில் தோட்டக்கலை விற்பனை நிலையம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கலைசெல்வன் முன்னிலையில் வேளாண் இணை இயக்குனர் டி.விவேகானந்தன் இந்த விற்பனை நிலையத்தை தொடங்கி வைத்தார்.
இந்த தோட்டக்கலைத்துறை விற்பனை நிலையத்தில் தேங்காய், தக்காளி, வெண்டை, கத்திரி, பாகற்காய் மற்றும் பீர்கங்காய் போன்ற காய்கறிகள் நேற்று முதற்கட்டமாக விற்கப்பட்டன. திருமங்கலம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சி.பிரபா, மேலூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஆர்.நிமலா, மதுரை கிழக்கு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் எஸ்.புவனேஸ்வரி உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.