உதகையில் அமைய உள்ள புதிய மருத்துவக் கல்லூரி கட்டிடத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் இன்று அடிக்கல் நாட்டினார்.
மலை மாவட்டமான நீலகிரி மக்கள் உயர்தர மருத்துவ வசதிகளுக்கு கோவை அல்லது கர்நாடகாவின் மைசூரு, கேரளாவின் பத்தேரி உள்ளிட்ட நகரங்களை சார்ந்திருக்க வேண்டிய நிலை இருந்து வந்தது. இதனால் போக்குவரத்து செலவுகள் மட்டுமின்றி அலைச்சலும் ஏற்பட்டு வருகிறது.
இதனால் நீலகிரி மாவட்டத்தில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் உயர்தர மருத்துவ சிசிச்சை பெறும் வகையில் உதகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர். மேலும் , உதகையில் உள்ள ஹெ.பி.எஃப். தொழிற்சாலை மூடப்பட்ட நிலையில் அந்த கட்டிடத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அமைக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் யோசனை தெரிவித்தனர்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் புதிதாக மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதற்காக உதகை ஹெ.பி.எஃப். அருகே கோல்ப் மைதான சாலைக்கும், கூடலூர் சாலைக்கும் இடைேய தமிழக அரசு வனத்துறைக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலமும், அருகில் கால்நடைத்துறைக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலமும் தேர்வு செய்யப்பட்டு அரசுக்கு வரைபடத்துடன் அறிக்கை அனுப்பப்பட்டது.
ஊட்டியில் புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டிடம் கட்ட ரூ.447 கோடியே 32 லட்சம் நிதியும், நிர்வாக செலவினங்களுக்காக ரூ.100 கோடியும் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணையும் வெளியிடப்பட்டது.
வனத்துறை வழங்கிய நிலத்திற்கு மாற்றாக சேலம் மாவட்டம் வாழப்பாடியில் வருவாய்த்துறைக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலம் வனத்துறைக்கு வழங்கப்பட்டது. வனத்துறை நிலத்தை பயன்படுத்துவதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்ததால் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், உதகையில் அமைய உள்ள புதிய மருத்துவக் கல்லூரி கட்டிட கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (ஜூலை 10) நடைபெற்றது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காணொலி காட்சி மூவம் அடிக்கல் நாட்டினார்.
உதகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, மருத்துவக்கல்லூரி டீன் ரவீந்திரன், குன்னூர் எம்எல்ஏ சாந்தி ராமு, முன்னாள் எம்.பி. கே.ஆர்.அர்ஜூணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.