கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம் 
தமிழகம்

தமிழகத்தில் மட்டும் வெளிநாட்டு முஸ்லிம்கள் கொடுமைப்படுத்தப்படுவது தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது; கே.எஸ்.அழகிரி

செய்திப்பிரிவு

வெளிநாட்டிலிருந்து வந்த முஸ்லிம்களை உடனடியாக விடுதலை செய்ய தமிழக முதல்வர் மனிதாபிமான முறையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (ஜூலை 10) வெளியிட்ட அறிக்கை:

"கரோனா பரவலுக்கு முன்பு மார்ச் மாதம் 8 ஆம் தேதி புதுடெல்லி நிஜாமுதீன் மர்கஸ் என்ற இடத்தில் உள்ள தப்லீக் ஜமாத் தலைமையகத்தில் உலகளாவிய மாநாடு நடைபெற்றது. இதில் 35 நாடுகளைச் சேர்ந்த 3,500 வெளிநாட்டு முஸ்லிம்கள் பங்கேற்க மத்திய அரசு விசா கொடுத்தது. மாநாடு நடத்த மத்திய அரசும், டெல்லி அரசும் அனுமதி கொடுத்தன. மாநாடு முடிந்ததும், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள முஸ்லிம்களின் வாழ்க்கை முறையை தெரிந்து கொள்ள ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

முன்னறிவிப்பின்றி மார்ச் 24 ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்த பொது ஊரடங்கு காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்தபோது பெரும் பிரச்சினை ஏற்பட்டது. பல நூறு கிலோ மீட்டர் தொலைவுக்கு அவர்கள் நடந்தே சென்றனர். அப்போது ஏராளமானோர் விபத்தில் உயிரிழந்தனர். இந்த பிரச்சினையை மறைக்க, கரோனா பரவியதற்கு தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தான் காரணம் என்ற பிரச்சாரம் திட்டமிட்டு வகுப்புவாத சக்திகளால் முன் வைக்கப்பட்டது. தங்கள் தவறை மூடி மறைப்பதற்கு இத்தகைய பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

இதனையடுத்து, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் மட்டும் எந்த தவறும் செய்யாத வெளிநாட்டு முஸ்லிம்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். தமிழ்நாடு தவிர மற்ற 5 மாநிலங்களில்; கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீன் கோரியபோது எதிர்க்கவில்லை. அவர்களை விடுவித்து, சம்பந்தப்பட்டவர்களின் நாட்டின் துணை தூதரகம் மற்றும் தனியார் இடங்களில் அந்தந்த மாநில அரசுகள் தங்க வைத்தன.

கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி காவல் நிலையங்களில் 12 பெண்கள் உட்பட 129 வெளிநாட்டு முஸ்லிம்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் சட்ட ரீதியாக நிவாரணம் பெறவும், சிறையில் இருந்து விடுதலை பெறவும், தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பவும் முயற்சி செய்து வந்தனர். ஆனால், அனைத்துக்கும் தமிழ்நாடு அரசு முட்டுக்கட்டை போட்டது. தமிழகத்தில் அரசியல் சாசனத்துக்கு எதிராக அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டு ஒரு மாதத்துக்குப் பிறகு, தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 6 பேரை சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்தது. சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்களை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்களை விடுதலை செய்து தனி இடத்தில் தங்க வைத்திருக்க வேண்டும்.

மாறாக, புழல் சிறையில் உள்ள சிறார் சிறையை சிறப்பு முகாம் என்று பெயரில் தடுப்பு முகாம் அமைத்து ஜாமீனில் விடுதலையான 6 பேரையும் அடைக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மே 8 ஆம் தேதி உத்தரவிட்டார். இந்தியாவுக்கு வந்த 3,500 பேரில், எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு வெளிநாட்டு முஸ்லிம்கள் பாதிக்கப்படவில்லை. ஜாமீனில் விடுதலையானவர்களை மீண்டும் சிறையில் அடைத்த கொடுமை தமிழகத்தில் மட்டுமே நடந்தேறியிருப்பது வெட்கக்கேடான ஒன்றாகும்.

வெளிநாட்டவர்களை தடுத்து வைத்திருக்கும் இடம், சிறை வளாகத்துக்குள் இருக்கக் கூடாது. வெளிச்சம், காற்று, நல்ல குடிநீர் வசதி, நல்ல கழிவறை வசதி இருக்கவேண்டும். சிறையில் இருக்கும் கைதிகளைப் போல் நடத்தக்கூடாது. அவர்களுக்கு தனியே உணவு சமைக்க வேண்டும் என்பன போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது.

இவை அனைத்தும் மீறப்பட்டு 38 பேர் அடைக்கப்பட வேண்டிய இடத்தில் பெண்கள் உட்பட 98 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். புழல் சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவையே இவர்களுக்கும் தருகின்றனர். ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களுக்கும் சிறையில் தயாரிக்கப்படும் உணவையே தருகின்றனர். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு, தமிழகத்தில் மட்டும் வெளிநாட்டு முஸ்லிம்கள் கொடுமைப்படுத்தப்படுவது தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு செய்யும் விதிமீறலால் இந்தப் பிரச்சினை சர்வதேச பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்தோனேஷியாவுக்கும், தமிழகத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக வர்த்தக உறவு உள்ளது. அங்கிருந்துதான் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில், தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 53 இந்தோனேஷியர்களுக்கு கொடுமை இழைக்கப்படுவது அந்நாட்டுடன் பகைமையை ஏற்படுத்தும். விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றது நம் தமிழகம். நம் நாட்டுக்கு விருந்தினர்களாக வந்து, தமிழக முஸ்லிம்களின் கலாச்சாரத்தை அறிய வந்தவர்களை கொடுமைப்படுத்துவது நியாயமா? இதுதான் தமிழர் பண்பாடா?

வெளிநாட்டு முஸ்லிம்களின் விசாவை ரத்து செய்தததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், விசாவை ரத்து செய்தால் அவர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டியதுதானே? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நம் நாட்டின் சிறுபான்மை சமூகத்தினரை பழி வாங்குவதாக நினைத்து, வெளிநாட்டு முஸ்லிம்களையும் பழி வாங்கும் செயலை இதைவிட எவரும் தோலுரித்துக் காட்ட முடியாது.

கைது செய்யப்படும் வெளிநாட்டவர்களை சிறையிலோ, சிறப்பு முகாம்களிலோ அடைக்க சட்டத்தில் இடம் இல்லை. அவர்களை தனி இடங்களில் தான் அடைத்து வைக்க வேண்டும். இதை எல்லாம் தெரிந்தே அதிமுக அரசு விதிகளை மீறி செயல்படுவது ஏன்?

பாதிக்கப்பட்ட வெளிநாட்டு முஸ்லிம்கள் சட்டரீதியான பலனை அடைய தடையாக இருக்கக் கூடாது. மேலும், புழல் சிறைக்குள் உள்ள தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் ஆகியோரது உடல் நலனில் அரசு அக்கறை செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

எனவே, நீதிமன்றம் காட்டிய கருணையின் அடிப்படையில் வெளிநாட்டிலிருந்து வந்த முஸ்லிம்களை உடனடியாக விடுதலை செய்ய தமிழக முதல்வர் மனிதாபிமான முறையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்"

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT