சென்னையில் இரண்டு நாட்களுக்கு மாலை அல்லது இரவு நேரங்களில் மழை தொடர்ந்து பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையின் தென் பகுதிகளில் பரவலாக நேற்று முன்தினம் இடியுடன் கூடிய மழை பெய்தது. தாம்பரம், பல்லாவரம், நங்கநல்லூர், கிண்டி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேத்துபட்டு, மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில்கன மழை பெய் துள்ளது. வட சென்னையின் சில பகுதிகளில் லேசான தூறல் போட்டது. நகரில் நேற்று காலை 8.30மணி வரை பதிவான மழை நிலவரப்படி நுங்கம்பாக்கத்தில் 47.5 மி.மீ, மீனம்பாக்கத்தில் 35.2 மி.மீ மழை பெய்தது.
கரு மேகங்கள் திரண்டு வருவதால் ஒரு சில இடங்களில் பெய்யும் கன மழை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறும்போது, “ நகரின் ஒரு சில பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்யலாம். மாலை அல்லது இரவு நேரங்களில் கன மழை பெய்யக்கூடும்” என்றார்.