பெரம்பலூர் மாவட்டம் கீழப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வம்(55), தன் சகோதரர் சுந்தரராஜூக்கு சேர வேண்டிய நிலத்தை, கடந்த 11.9.2015 அன்று வாலிகண்டபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் போலி ஆவணம் மூலம் தனது பெயருக்கு மாற்றி, பின்னர் விற்றுவிட்டார்.
போலி ஆவணம் தயாரித்து தனது நிலத்தை விற்பனை செய்த செல்வம் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அப்போதைய வாலிகண்டபுரம் சார் பதிவாளர் அருள்ஜோதி, பத்திர எழுத்தர் செந்தில்குமார், கீழப்புலியூரை சேர்ந்த துரைசாமி, நடராஜன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், தனது நிலத்தை மீட்டுத்தரக் கோரி பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் சுந்தரராஜ் புகார் அளித்தார். இதுகுறித்து போலீஸார் நேற்று வழக்கு பதிவு செய்து, போலி ஆவணம் தயாரிக்க உடந்தையாக இருந்த அப்போதைய சார் பதிவாளர், தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்டப் பதிவாளராக உள்ள அருள்ஜோதி உட்பட 5 பேரை தேடிவருகின்றனர்.