நா.கார்த்திக் எம்எல்ஏ: கோப்புப்படம் 
தமிழகம்

கோவையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் வெளிப்படைத்தன்மை இல்லை; திமுக எம்எல்ஏ நா.கார்த்திக் குற்றச்சாட்டு

ஆர்.கிருஷ்ணகுமார்

கோவை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை உள்ளிட்டவை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிடும் தகவல்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று திமுக கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (ஜூலை 9) கூறியதாவது:

"கரோனா தொற்று தொடர்பாக அரசுத் தரப்பில் வெளியிடும் தகவல்களில் வெளிப்படைத்தன்மை இல்லை. கோவை செல்வபுரம் பகுதியில் 200 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 116 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், சுகாதாரத் துறை 35 பேருக்கு மட்டுமே பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

கோவையில் நோய்த் தொற்று குறைவதாக, போலியாகக் கணக்குக் காட்ட மாவட்ட நிர்வாகம் முயல்கிறது. உண்மையான விவரங்களை மறைப்பது பேராபத்தாக மாறும். கோவையில் நாளுக்கு நாள் வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே இதற்கு உதாரணம்.

மாவட்டத்தில் உள்ள கரோனா பரிசோதனை மையங்கள், மருத்துவமனைகளின் எண்ணிக்கை, பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, மருத்துவமனை வாரியாக கரோனா நோய்த் தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள விவரம், இறந்தவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அளிக்குமாறு மாவட்ட நிர்வாகத்திடம் ஏற்கெனவே திமுக சார்பில் கேட்டிருந்தோம்.

ஆனால், இதுவரை எந்த பதிலும் கூறவில்லை. அதேபோல, போதிய அளவுக்கு மருந்துகள் மற்றும் வென்டிலேட்டர்கள் கையிருப்பு உள்ளதா என்பது குறித்தும் அரசு சார்பில் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.

இனியாவது கோவை மாவட்ட நிர்வாகம் விரைவாகச் செயல்பட்டு, உரிய திட்டத்தை உருவாக்கி, மக்களுக்கு உண்மையான புள்ளிவிவரங்களை வெளிப்படையாகத் தெரிவித்து, தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்த வேண்டும். கரோனா நிலவரம் குறித்து மக்களுக்கு உண்மையான தகவல்களைத் தெரியப்படுத்த வேண்டும். தொற்றைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில் கோவை மாவட்ட நிர்வாகம் விழிப்புடனும், திறந்த மனதுடன் இருக்க வேண்டும்".

இவ்வாறு நா.கார்த்திக் எம்எல்ஏ தெரிவித்தார்.

SCROLL FOR NEXT