பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

நெல்லை ஆட்சியர் அலுவலக அதிகாரி உள்ளிட்ட 110 பேருக்கு கரோனா; பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பால் மக்கள் அச்சம்

அ.அருள்தாசன்

சென்னை, மதுரையைப் போல் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியர் உள்ளிட்ட 110 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகவே மூன்று இலக்கமாக பாதிப்பு எண்ணிக்கை இருந்த நிலையில் நேற்று (ஜூலை 8) பாதிப்பு எண்ணிக்கை நான்கு இலக்கமாக உயர்ந்திருந்தது. மாவட்டத்தில் இன்று (ஜூலை 9) வரையில் 1,409 பேருக்கு நோய்த்தொற்று இருந்தது. அவர்களில் 735 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள். 665 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியர், திருநெல்வேலி சந்திப்பு, முக்கூடல் பகுதிகளில் உள்ள வங்கி அதிகாரிகள், பாளையங்கோட்டை மத்திய சிறையில் இரு காவலர்கள் என்று இன்று ஒரே நாளில் 110 பேருக்குப் பாதிப்பு உறுதியானது.

நோய்த்தொற்று உள்ளவர்கள் மூலமே தற்போது புதிய பாதிப்புகள் அதிக அளவில் ஏற்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

SCROLL FOR NEXT