தமிழகம்

சாத்தான்குளம் வழக்கில் சிபிஐ நாளை தூத்துக்குடி வருகை: கைது செய்யப்பட்டோரைக் காவலில் எடுக்க முடிவு

ரெ.ஜாய்சன்

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் நாளை (ஜூலை 10) தூத்துக்குடி வந்து வழக்கு ஆவணங்களை முறைப்படி பெற்று, விசாரணையைத் தொடங்குகின்றனர்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால், சிபிஐ தனது விசாரணையைத் தொடங்கக் காலதாமதம் ஆகும் என்பதால், அதுவரை சிபிசிஐடி போலீஸார் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

அதன்பேரில் சிபிசிஐடி போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்குத் தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 10 பேரை சிபிசிஐடி போலீஸார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் துரிதமாக விசாரித்து வந்த நிலையில் வழக்கை சிபிஐ முறைப்படி ஏற்றுக்கொண்டது.

இது தொடர்பாக டெல்லி சிபிஐ சிறப்புப் புலனாய்வுப் பிரிவில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக டெல்லி சிபிஐ சிறப்புப் புலனாய்வுப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் வி.கே.சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையிலான சிபிஐ விசாரணைக் குழுவினர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை (ஜூலை 10) காலை மதுரைக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணையைக் கண்காணிக்க எஸ்பி மட்டத்திலான அதிகாரியும் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிபிஐ விசாரணைக் குழுவினர் நாளை பிற்பகல் 2 மணிக்குத் தூத்துக்குடிக்கு வந்து, இந்த வழக்குத் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் முறைப்படி பெற்றுக் கொள்வதாக சிபிசிஐடி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிபிஐ குழுவினர் நாளை தூத்துக்குடிக்கு வந்து வழக்கு ஆவணங்களை முறைப்படி பெற்றுக்கொண்டு விசாரணையை உடனடியாகத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் இருந்து சிபிசிஐடி விலகிக்கொள்ளும். அதன் பிறகு சிபிஐ இந்த வழக்கை முழுமையாக நடத்தும். சாத்தான்குளம் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தும் சிபிஐ அதிகாரிகள், இந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸாரால் ஏற்கெனவே கைது செய்யப்பட்டவர்களைத் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். எனவே, அடுத்து வரும் நாட்களில் இந்த வழக்குத் தொடர்பாக சிபிஐயின் நடவடிக்கைகளைக் காணலாம்.

SCROLL FOR NEXT