தமிழகம்

சாத்தான்குளம் வழக்கில் கைதான போலீஸாரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

கி.மகாராஜன்

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் போலீஸாரைக் காவலில் எடுத்து விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் குறிப்பிட்ட நேரம் தாண்டி செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததாக போலீஸார் கைது செய்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். பின்னர் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். போலீஸார் தாக்கியதில் இருவரும் உயிரிழந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. உடனடியாக சிபிசிஐடி போலீஸார் சாத்தான்குளம் போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என 10 பேரைக் கைது செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன் வாதிடுகையில், ''இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமைக் காவலர் ரேவதியிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது'' என்றார்.

சிபிஐ சார்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கதிர்வேல் வாதிடுகையில், ''சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சிபிஐ இரு வழக்குகள் பதிவு செய்துள்ளன. சிபிஐ அதிகாரிகள் நாளை விசாரணையைத் தொடங்க உள்ளனர். விசாரணைக்கு தேவையான ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழக அரசிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது'' என்றார்.

இதையடுத்து இதுவரை நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் மூடி முத்திரையிட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை 15 நாள் காவல் முடிவதற்குள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அல்லது சிபிசிஐடி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 28-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்த மனுவுடன் கைதிகளை நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தும் முன்பு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் அர்ஜூனன் தாக்கல் செய்த மனுவையும், வழக்குப் பதிவு செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் லலிதகுமாரி வழக்கில் பிறப்பித்த உத்தரவைப் பின்பற்ற போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி வாசுகி என்பவர் தாக்கல் செய்த மனுவையும் நீதிபதிகள் விசாரித்தனர்.

SCROLL FOR NEXT