மத்திய அரசின் ‘மின்சார வரைவுத் திருத்தச் சட்டம் 2020’-ஐத் திரும்பப் பெறக் கோரி, தாளவாடியில் விவசாயிகள் கலந்துகொண்ட கையெழுத்து இயக்கம் இன்று நடைபெற்றது.
இலவச மின்சார உரிமைக் கூட்டியக்கத்தின் சார்பில் தாளவாடி பேருந்து நிலையம் அருகே ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கையெழுத்து இயக்கத்தை, கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பு தொடங்கி வைத்தார். தாளவாடி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் எம்.மோகன், சத்தியமங்கலம் நகர ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஸ்டாலின் சிவக்குமார், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் எஸ்.சி நடராஜ், விவசாயிகள் சங்கப் பொறுப்பாளர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
''மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள ‘மின்சார வரைவுத் திருத்தச் சட்டம் 2020’ விவசாயிகளின் இலவச மின்சார உரிமைக்கு எதிராகவும், குடிசைகளுக்கு ஒற்றை மின் விளக்கு பெற்றுள்ள ஏழைகளுக்கு எதிரானதாகவும், நெசவாளர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மின்சாரச் சலுகைகளுக்கு எதிரானதாகவும் அமைந்துள்ளது. ஆகவே, மத்திய அரசு இந்தச் சட்டத்தை உடனே கைவிட வேண்டும்.
மின்சாரத்தைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர மத்திய - மாநில அரசுகள் சட்டப் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும். தறிகள் மற்றும் வீடுகளுக்கு மானிய விலை மின்சாரம், ஒற்றை விளக்குக் குடிசைகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் ஆகியவை தொடர வேண்டும்'' ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஒரு கோடி கையெழுத்துப் பெற்று பிரதமருக்கு அனுப்பும் இயக்கம் கடந்த வாரம் தொடங்கியது.
இதன் ஒரு பகுதியாக தாளவாடியில் கையெழுத்து இயக்கம் இன்று நடைபெற்றது. இதுகுறித்து ’இந்து தமிழ்’ இணையத்திடம் பேசிய கையெழுத்து இயக்க ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான நடராஜ், ‘‘பவானி சாகர் தொகுதியில் மட்டும் 50 ஆயிரம் கையெழுத்துப் பெற நிர்ணயிக்கப்பட்டு 10 நாட்கள் முன்பு இந்த இயக்கத்தை சத்தியமங்கலத்தில் தொடங்கினோம். முதல் நாளே 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்வத்துடன் கையெழுத்திட்டனர். இதுவரை 25 கிராமங்களில் பயணித்து 5 ஆயிரம் கையெழுத்துக்கு மேல் பெற்றுள்ளோம்.
மத்திய அரசின் மின்சாரத் திருத்தச் சட்டத்தால் தங்களுக்கு எந்த விதத்தில் எல்லாம் பாதிப்பு வரும் என்பதைக் கூட்டியக்கத்தினரை விட விவசாயிகள் நிறையவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்களே ஆர்வத்துடன் தேடித் தேடி மற்ற விவசாயிகளிடமும் கையெழுத்துப் பெற்று வந்து தருகிறார்கள். வரும் திங்களன்று பவானி சாகரில் பத்து கிராமங்களில் இந்தக் கையெழுத்து இயக்கத்தை இன்னும் தீவிரப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.