கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாகக் கடந்த ஒரு வாரமாக தினமும் 50 பேர் முதல் 100 பேர் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில் வடசேரி சந்தை, ஒழுகினசேரி அப்டா சந்தை, கோட்டாறு மார்க்கெட் என மக்கள் கூடும் பகுதிகளில் வியாபாரிகள் 50-க்கும் மேற்பட்டோருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு வந்த பொதுமக்களுக்கும் கரோனா வேகமாகப் பரவியது. இதைப்போல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஊராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள், மருத்துவமனை என மக்கள் பயன்பாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் அலுவலகங்களிலும் கரோனா வேகமாகப் பரவி வருகிறது.
மாவட்டம் முழுவதும் 55 ஆயிரம் பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் 24 மணி நேரத்தில் 100 பேருக்கு மேல் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 1000 பேரைத் தாண்டியுள்ளது. இதுவரை கரோனா பாதித்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாகக் குளச்சல் சந்தை, பேருந்து நிலையம் மூலம் கரோனா பரவுவது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து சந்தையும், பேருந்து நிலையமும் மூடப்பட்டன.
குமரி மாவட்டத்தில் கரோனா அதிவேகமாகப் பரவி வருவதால் மாவட்டம் முழுவதும் உள்ள மொத்த விற்பனைச் சந்தைகளைத் தற்காலிகமாக மூடி, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். கரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்த பின்னரே சந்தைகள் திறக்கப்படும். விதிமுறையை மீறி சந்தைப் பகுதிகளில் கடைகளைத் திறப்போர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குமரியில் வேகமாகக் கரோனா பரவி வருவதைத் தொடர்ந்து நாகர்கோவில் எஸ்.பி. அலுவலக வளாகத்தில் கிருமிநாசினி அடிக்கப்படுகிறது.