மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவல் விகிதம் அதிகமாக இருப்பதால் இந்த நோயைக் கண்டுபிடிக்க மாநகராட்சி சார்பில் 100 வார்டுகளில் 155 இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. காய்ச்சல், இருமல் இருந்தால் உடனடியாக கரோனா பரிசோதனை செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அடுத்து மதுரை மாவட்டத்தில் 5,057 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 1,160 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 86 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளனர். மற்றவர்கள் சிகிச்சையில் உள்ளனர்.
மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் புறநகர் கிராமங்களை விட மாநகராட்சியில் பாதிப்பு விகிதம் மிக அதிகம். இதுவரை தினமும் அறிகுறி இருப்பவர்களுக்கு 1,500 முதல் 2,000 பேருக்கு இந்தப் பரிசோதனை செய்தனர். இன்று (ஜூலை 9) முதல் 3 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யத்தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் விசாகன் கூறுகையில், "மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 16 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் காலை 9 மணி முதல் 12 மணி வரை தலா 2 இடங்கள், மாலை 1 மணி முதல் 3.30 மணி தலா 2 இடங்கள் என நாள் ஒன்றுக்கு மொத்தம் 64 இடங்களில் நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.
காலை 9 மணி முதல் 10.30 மணி வரை, காலை 11 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை 2 இடங்களிலும், பிற்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை, பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 2 இடங்களிலும், என 20 இடங்களில் நிலையான மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.
காலை 7 மணி முதல் 10.30 வரையும், மாலை 4 மணி முதல் 6.30 மணி வரையும் என 12 இடங்களில் இஎஸ்ஐ மருத்துவமனை மற்றும் மருந்தகம் மூலமும், காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, பிற்பகல் 1 மணி முதல் 3.30 மணி வரை என 8 இடங்களில் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ முகாம்களும் என மாநகராட்சி 100 வார்டுகளில் மொத்தம் 155 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள் சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி, தும்மல் உள்ளிட்ட அறிகுறியிருந்தால் தங்கள் வீடுகளுக்கு அருகே நடக்கும் இந்த முகாம்களில் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொள்ளலாம். காய்ச்சல், ரத்த அழுத்தம் பரிசோதனை செய்து சளி மாதிரி பரிசோதனை செய்யப்படுகிறது. முகாமுக்கு வரும் பொதுமக்கள் அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்படுகிறது. காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு உடனடியாக மாதிரி பரிசோதனை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம் குறித்து ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்யப்படுகிறது" என்றார்.
பட்டியலைக் காண: