தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்குத் தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகள் செய்யப்பட்டு வருவதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கன் மருத்துவமனையில் கரோனா வார்டு அமைப்பதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளையும், கூடுதலாக படுக்கை வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பாகவும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மேலும், தூத்துக்குடி நந்தகோபாலபுரம், ஏரல் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் சுகாதாரப் பணியாளர்கள் மேற்கொண்டு வரும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் மற்றும் வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்யும் பணிகளை அவர் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
''தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாகக் கூடுதலாகப் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதிக பாதிப்புக்கு உள்ளாகிய நபர்களைத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதற்காக 600 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், லேசான அறிகுறி உள்ள நபர்களை தாலுகா மருத்துவமனைகளில் அனுமதித்து அவர்களுக்குத் தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், அறிகுறி இல்லாத நபர்கள், கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் கேர் சென்டர்களில் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த கோவிட் கேர் சென்டர்களில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியாற்றுவார்கள். அங்கு அனுமதிக்கப்படும் நபர்களுக்குத் தேவையான உணவு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
கோவிட் கேர் சென்டர்களில் 600 படுக்கைகள் தற்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதனை 1,000 படுக்கைகளாக உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், தனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று நோயாளிகளுக்குக் கூடுதல் படுக்கைகள் மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாகத் தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கன் மருத்துவமனையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்''.
இவ்வாறு ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.