வர்த்தகர்கள் - காவலர்கள் கலந்தாய்வுக் கூட்டம் | கோப்புப்படம் 
தமிழகம்

கரோனா பரவலைத் தடுக்க வணிகர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்!

கரு.முத்து

கரோனா தொற்று பரவாமல் தடுக்கவும், காவலர்களுடன் தேவையில்லாத மோதல்கள் ஏற்படுவதைத் தவிர்த்திடும் வகையிலும் புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் பகுதி வர்த்தகர்கள் தங்களுக்குள்ளாகவே பலவிதக் கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்தக் கட்டுப்பாடுகள் குறித்து காரைக்காலில் செயல்படும் சேம்பர் ஆஃப் காமர்ஸ் சார்பில் அனைத்து வர்த்தகர்களுக்கும் தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி மாநில அரசு, காரைக்காலில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கடைகள் திறந்து வியாபாரம் செய்ய அனுமதித்துள்ளது. காரைக்காலில் கரோனா வைரஸ் நோய்த்தொற்று, சமூகப் பரவலாக மாறக்கூடிய சூழ்நிலையில் உள்ளது. நேற்று ஒரே நாளில் 25 பேர் இங்கு வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

தொற்றுப் பரவலைத் தடுக்க காரைக்கால் மாவட்ட நிர்வாகம் பல கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், காரைக்கால் பகுதி வர்த்தகர்களும் அரசின் வழிகாட்டுதல்களைச் சரியாகப் பின்பற்றி, தொற்று பரவாமல் தடுக்க தங்களால் ஆன ஒத்துழைப்பை வழங்க முடிவெடுத்துள்ளனர்.

காரைக்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பு இது தொடர்பாக வர்த்தகர்களுக்கு பல்வேறு விதிமுறைகளைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தியுள்ளது.

அதன் விவரம்:

''வணிகர்கள் அனைவரும் அரசின் சட்ட திட்டங்களைப் பின்பற்றி நமது வணிகத்தை நடத்திக் கொள்ள வேண்டும். சட்டத்தை மீறும் வணிக நிறுவனங்கள் மீது மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து சட்ட நடவடிக்கைக்கும் காரைக்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸ் முழு ஒத்துழைப்பு அளிக்கும். ஆதலால் அனைத்து வணிக நிறுவனங்களும் மிகவும் கவனமாக, நோய் தொற்றுப் பரவாமல் இருக்கும் வகையில் தங்களின் வணிக பரிவர்த்தனைகளை நடத்திக் கொள்ள வேண்டும்.

அத்துடன், வணிகர்கள் அனைவரும் சில முக்கிய விதிமுறைகளைக் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும். கடைக்கு வரும் வாடிக்கையாளர், கடை ஊழியர்கள் என அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்கள் கைகளைச் சுத்தம் செய்துகொள்ள வணிக நிறுவனத்தின் வாயிலில் சானிடைசர் வைத்திருத்தல் அவசியம். அத்துடன் வாடிக்கையாளர்களைக் கட்டாயம் ’தெர்மல் ஸ்கேனர்’ கொண்டு உடல் வெப்ப பரிசோதனை செய்த பிறகே வணிக நிறுவனங்களுக்குள் அனுமதிக்க வேண்டும்.

சிறிய கடைகளின் வாசலில் வாடிக்கையாளர்கள் கும்பலாக நிற்க அனுமதிக்கக் கூடாது. தனிமனித இடைவெளி விட்டு நிற்க ஏதுவாகக் கடை வாசலில் வட்டங்கள் வரைந்து அதனுள் அவர்களை ஒருவர் பின் ஒருவராக நிற்க வைப்பதும் அவசியம். வரைந்த வட்டங்கள் எப்போதும் பளிச்சென இருப்பது அவசியம். சிறு வியாபாரிகள், கூடுமானவரை வாடிக்கையாளரைக் கடை முன் தனிமனித இடைவெளி விட்டு நிற்க வைத்து அவர்களுக்குத் தேவையான பொருட்களை வழங்க வேண்டும். இதன் மூலம் கடைக்குள் ஆட்கள் குவிவதைத் தடுக்க முடியும்.

சற்று பெரிய கடைகளில் கடை உள்ளேயும் வாடிக்கையாளர் கும்பலாக நிற்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். அனைத்துக் கடைக்காரர்களும் பில்லுக்குரிய தொகையைப் பணமாகக் கையில் வாங்காமல் பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்றவற்றின் மூலமோ அல்லது டெபிட் கார்டுகள் மூலமாகவோ பெற்றுக் கொள்ளவும். இது வாடிக்கையாளர் பில்லிங் செக்‌ஷனில் கும்பலாகக் குவிவதைத் தடுக்கும். இதை எல்லாம் சரியாகக் கடைப்பிடிக்க, கடை வாசலில் ஒரு பணியாளரை நிற்க வைத்து அவர்கள் மூலம் கண்காணிக்க வைப்பது நல்லது.

வணிக நிறுவனங்களை மூடும் நேரம் இரவு 8 மணி என்று அரசு அறிவித்துள்ள நிலையில், தினசரி வாடிக்கையாளர்கள் சேவையை இரவு 7.45-க்குள் முடித்து விடவேண்டும். அதன் பிறகு வாடிக்கையாளரைக் கண்டிப்பாகக் கடைக்குள் அனுமதிக்க வேண்டாம். மேலே சொன்ன இந்த வழிகாட்டி முறைகளைத் தவறாமல் கடைப்பிடித்தால் நகராட்சி அலுவலர்கள், காவல் துறையினர் உள்ளிட்டோர் நமது வர்த்தக நிறுவனங்களுக்கு வந்து விசாரணை நடத்தும் தேவையற்ற சங்கடங்களைத் தவிர்க்க முடியும்''.

இவ்வாறு காரைக்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸ் வலியுறுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT