மருத்துவப் படிப்புக்காக தமிழகத்தால் மத்திய தொகுப்புக்கு ஒப்படைக்கப்படும் இடங்களில் தமிழக ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு கோரும் தமிழக அரசின் மனு மீதான விசாரணையை ஜூலை 13-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
மருத்துவப் படிப்பில் தமிழகத்தால் மத்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் 50% இடத்தை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுக்கக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
அதேபோல தமிழகத்தால் மத்திய தொகுப்புக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவ மேற்படிப்புக்கான இடங்களில் 50% தமிழக ஓபிசி மாணவர்களுக்கென ஒதுக்கீடு செய்யாமல் மருத்துவ மேற்படிப்புக்கான சேர்க்கை நடத்தக்கூடாது. மேலும், இந்தக் கல்வியாண்டில் மருத்துவ மேற்படிப்புக்கென நடத்தப்பட்ட நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ மேற்படிப்பு சேர்க்கைக்குத் தடை கோரியும் T.G.பாபு என்ற மருத்துவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
தமிழக அரசின் வழக்கும், மேல்முறையீட்டு மனுவும், நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரான மருத்துவர் பாபு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு முறை கடைப்பிடிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
அப்போது நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ், கடந்தமுறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது, இட ஒதுக்கீடு கோரி திமுக தாக்கல் செய்த வழக்கும், சலோனி குமாரி தாக்கல் செய்த வழக்கும் ஒரே கோரிக்கையைக் கொண்டது என வாதிட்டீர்கள், ஆனால் இப்போது இரு வழக்குகளும் வேறு எனத் தெரிவிக்கின்றீர்களே? எனக் கேட்டார்
அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.கிரி, தமிழக அரசின் மனு சலோனி குமாரி வழக்கிலிருந்து மாறுபட்டது. ஏனெனில் சலோனிகுமாரி வழக்கு உத்தரப் பிரதேச மாநிலத்துக்கானது. எனவே அவரின் கோரிக்கை என்பது அகில இந்தியாவுக்கோ, தமிழகத்துக்கோ பொருந்தாது என்பதை விளக்கினார்.
அதைத் தொடர்ந்து நீதிபதிகள், உத்தரப் பிரதேசத்தில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு கோரிய சலோனி குமாரி என்பவர் தொடர்ந்த வழக்கையும், தமிழக அரசின் கோரிக்கையும் ஒரே மாதிரியானதா என்பது தொடர்பாக ஆவணங்களை ஆய்வு செய்வதற்கு ஏதுவாக, வழக்கு தொடர்பான விசாரணையை ஜூலை 13-ம் தேதிக்கு (திங்கட்கிழமை) ஒத்திவைத்தனர்.